இலங்கையில் இருந்து இன்று (01) வெள்ளிக்கிழமை
அதிகாலை செல்லவிருந்த முதலாவது ஹஜ் குழுவின் விமானம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரச ஹஜ் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.குறித்த ஹாஜிகளை வேறு விமானங்களில் இன்று (01) இரவு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் றியாஸ் மிஹ்லார் தெரிவித்தார்.
இந்த ஹாஜிகளுக்குத் தேவையான விமானச் சீட்டுக்கள் இரண்டு விமான சேவை நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடாக ஹஜ்ஜூக்கு செல்லவிருந்த 50 ஹாஜிகளின் விமானமே ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
குவைத் எயார் வேஸ் விமானமே இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் குவைத் விமான நிலையம் முழுமையாக செயற்பட இன்னும் ஆரம்பிக்காமையினால் குவைத்திலிருந்து கொழும்பிற்கு நேற்றிரவு விமானம் வரவில்லை.
இதனாலேயே குறித்த விமானப் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
