Our Feeds


Tuesday, May 26, 2026

Zameera

ஆதிவாசி சமூகத்தினரின் பூர்வீக நிலங்களை மீள ஒப்படைக்க மஹாவலி அதிகாரசபை இணக்கம்


 விவசாய நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த, ஆதிவாசி சமூகத்தினர்   பயன்படுத்தி வந்த காணிகளை மீண்டும் அவர்களிடமே விடுவிப்பதற்கு மஹாவலி அபிவிருத்தி அதிகாரசபை இணக்கம் தெரிவித்துள்ளது.


ஆதிவாசி சமூகத்தினரின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட்  மனு  மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (26) செவ்வாய்க்கிழமை   பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மஹாவலி அதிகாரசபை இந்த உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுத்துள்ளது.


விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் கடந்த 2021ஆம் ஆண்டில் பொல்லேபெத்த மற்றும் ரம்பகன் ஓயா ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த வனப்பகுதிகளைக் கனரக இயந்திரங்கள் கொண்டு துப்பரவு செய்திருந்தன. ஆதிவாசி சமூகத்தினரின் வாழ்வாதாரத்தையும் கலாசாரத்தையும் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நில அபகரிப்பு மற்றும் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவே, ஆதிவாசி சமூகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த ரீட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த மனு இன்றையதினம் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, ஆதிவாசி தலைவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே முன்னிலையாகியிருந்தார். இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பூர்வீக நிலங்கள் அனைத்தையும் அந்த நிறுவனங்களிடமிருந்து மீட்டு, மீண்டும் ஆதிவாசி  சமூகத்தினரிடம் ஒப்படைப்பதுக்கு மஹாவலி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றிற்குத் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »