நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதுடன், பொருட்களின் விலைவாசி உயர்வினால் மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைப் பின்வருமாறு குறிப்பிட்டார்.....
கபில சந்திரசேனவின் மரணம் தற்கொலை என கூறப்பட்டாலும், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கு ஏதோவொரு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது. அவர் முறையான பிணையாளர்களை முன்வைத்து பிணையில் விடுவிக்கப்பட்ட மறுநாளே, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதாவது, கபில சந்திரசேன முறையற்ற பிணையாளர்களை சமர்ப்பித்துள்ளதால் அவரது பிணையை ரத்து செய்து, வழக்கு முடியும் வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரப்பட்டது.
உண்மையில், கபில சந்திரசேனவிடம் தகுதியான பிணையாளர்கள் இருந்தபோதும், பிறிதொரு தரப்பினரால் தகுதியற்ற இரு பிணையாளர்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளனர். எனினும், அந்த இருவரையும் நீதிமன்றத்தின் பதிவாளர் நிராகரித்துள்ளார். கபில சந்திரசேன எவ்வித சட்டவிரோத தன்மையுமின்றி முறையான பிணையாளர்களை முன்வைத்தே பிணை பெற்றுள்ளார்.
பிணையாளர்கள் தகுதியானவர்களா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இரகசியமான முறையில் செயற்பட்டுள்ளது. முன்னதாக, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கபில சந்திரசேனவை தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவரின் கீழ் செயற்படும் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது, ஆணையாளர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள்? அவருக்கு எதிராக விசாரணை நடத்தி அவரை பதவியிலிருந்து நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு ஏன் அறிவிக்கவில்லை? இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தற்போது ஒரு சுயாதீன நிறுவனம் அல்ல, அது அரசியல் தேவைகளுக்காக இயங்கும் ஒரு நிறுவனமாக மாறியுள்ளது.
அதேபோல், நாட்டின் பொருளாதாரம் தற்போது மிக ஆபத்தான முறையில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டில் டொலரின் மதிப்பு அதிகரித்ததற்கு கோவிட் நெருக்கடி, சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் வருகை இன்மை போன்ற நியாயமான காரணங்கள் இருந்தன. அத்துடன் வெளிநாட்டு தொழிலாளர்களை பணம் அனுப்ப வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி (JVP) கோரியிருந்தமையும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
ஆனால், இன்று கோவிட் நெருக்கடி இல்லை. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், இந்த அரசாங்கத்தின் ஊழல் காரணமாகவே நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. நிலக்கரி ஊழல் காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகளவிலான டீசலை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிக விலைக்கு டீசல் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
இந்த நிலக்கரி மற்றும் டீசல் ஊழல்களே பொருளாதார வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டில் இருந்த முதலீட்டாளர்களையும் விரட்டியடித்தது. கடந்த ஒரு வருடமும் 8 மாத கால ஆட்சிக்குள், நாட்டிற்கு ஒரு டொலரேனும் கொண்டு வரக்கூடிய ஒரு முதலீட்டாளரைக் கூட ஈர்க்க இந்த அரசாங்கம் தவறியுள்ளது.
நாடு இத்தகைய பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியும் பிரதமரும் இதில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். ஆனால், பிரதமர் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அது ஒரு பொழுதுபோக்கு பயணமா? அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏதேனும் முதலீடுகளை கொண்டுவரும் பயணமா? மறுபுறம், நாடு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் வேளையில், ஜனாதிபதி அருகம்பே பகுதிக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் ஜனாதிபதி பொருளாதார நிபுணர்களையும் பேராசிரியர்களையும் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், விவசாயிகளுக்கு உரம் இன்றி, அத்தியாவசிய பொருட்களின் விலை தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், ஜனாதிபதி சமூக ஊடக செயற்பாட்டாளர்களை அழைத்து, அரசாங்கத்தின் திறமையின்மையை மறைத்து எவ்வாறு பொய்களை பரப்புவது என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
எனவே, இந்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் தொலைநோக்குப் பார்வையற்ற தன்மையின் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சீர்குலைக்கப்பட்டுள்ளது என சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.
