வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வழிபாட்டுத் தலங்கள், தன்சல்கள் மற்றும் வெசாக் வலயங்களில் சிவில் உடையிலான பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அலட்சியமாக அல்லது அபாயகரமாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பான தகவல்களை 070-4755600 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது 119, 188 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்கள் மூலம் அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
