Our Feeds


Tuesday, June 2, 2026

Zameera

நெல் உற்பத்தி வசதிகளை மேம்படுத்த ரூ.1000 மில்லியன் நிதி ஒதுக்கீடு


 நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ.1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான இயந்திரங்கள் தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருப்பதாகவும் கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கருத்தை முன்வைத்தார்.

கூட்டுறவு சங்கங்களுக்கு நெல் உலரவைக்கும் இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்க ரூ.500 மில்லியன் பெறுமதியான நிகழ்ச்சித்திட்டமும், உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கு உற்பத்தி மற்றும் பொதியிடும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய ரூ.100 மில்லியன் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமும் இந்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். 

அத்துடன், நெல்லை அரிசியாக மாற்றுவதற்கும் கிழங்கைக் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் தலையிட்டிருப்பதாகவும், ஒரு கிலோ கிழங்கை ரூ.220 இற்கு கொள்வனவு செய்து வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சம்பா மற்றும் கீரி போன்றவற்றுக்கு மாற்று அரிசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதுடன், ஏப்ரல் மாதத்தில் 120,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மாத்திரமே அரிசி இறக்குமதி குறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சில கூட்டுறவு சங்கங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை எந்தவித தண்டனையுமின்றி அந்தச் சங்கங்களில் மீண்டும் பதவிகளில் நியமிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். 

தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மகாபொல புலமைப்பரிசிலைப் பெற்ற பழைய மாணவர்களின் சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சகல பழைய மாணவர்களும் இணைந்துகொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சங்கம் எதிர்கால மாணவர் சமூகத்தின் மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் தகவல் கட்டமைப்பை புதுப்பிப்பது மற்றும் அதன் செயல்திறனை அதிகரித்தல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன மற்றும் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »