Our Feeds


Tuesday, June 9, 2026

Admin

காணாமல் போன 2.5 மில்லியன் டொலர் | திறைசேரி அறிக்கையை பாராளுமன்றில் சமர்பிக்காதது ஏன்? - சஜித் கேள்வி.



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


காணாமல் போன 2.5 மில்லியன்  டொலர் தொடர்பில் ஆராய்ந்த திறைசேரியின்   அறிக்கை  ஏன் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை  என்பதில் பிரச்சினை உள்ளது. எனவே  குறித்த அறிக்கையை உடனடியாகப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.  


பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (09) நிலையியற் கட்டளை 27/2 இல் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,



ஒரு நாட்டின் தேசிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் அதன் நடைமுறை செயற்பாடுகள் தொடர்பான புரிதல் பொருளாதார நிபுணர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் இருக்க வேண்டும்.


சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டு கட்டமைப்பிற்குள் அரசாங்கம் பொருளாதாரத்தை முழுமையாக நிர்வகிக்கிறது என்று தெரிவிக்கின்றது.


எனினும், வெளிப்புற மற்றும் உள்நாட்டு, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு முன்னால் அதிக ஆபத்தான மாற்றங்களை வெளிப்படுத்தும் நமது நாட்டின் பொருளாதார அழுத்தத்தை மிகவும் கடுமையாக உணர்வது சாதாரண மக்கள் என்பதால், கீழ்கண்ட கேள்விகளை தெளிவான பதில்களை நாடி முன்வைக்கிறேன்.


இலங்கையின் தேசிய பொருளாதாரக் கொள்கையானது பிரதானமாக அரச நிதிக் கொள்கை மற்றும் நாணயக் கொள்கை  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? தற்போது இலங்கை பின்பற்றும் நிதி மற்றும் நாணயக் கொள்கைக் கருவிகள் யாவை? அவற்றின் இலக்குகள் மற்றும் அந்த இலக்குகளை அடைவதற்கான பொறுப்பை சுமக்கும் நிறுவனங்கள் யாவை?இலங்கை செய்திகள்


2.5 மில்லியன் டொலர் காணாமல் போனது தொடர்பில் மத்திய வங்கியும் திறைசேரியும் ஏன் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றன? 


நிதிக் குழு கூடிய சமயத்தில், நாணயக் கொள்கையை அமுல்படுத்தும் மத்திய வங்கிக்கும், நிதிக் கொள்கையை அமுல்படுத்தும் திறைசேரிக்கும் இடையே  கடுமையான பிரச்சினை எழுந்தது .


அரசின் நிதி மற்றும் நாணயக் கொள்கைகள் ஓரளவிற்காவது ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டிய நேரத்தில், மத்திய வங்கி திறைசேரியின் விளக்கங்களை நிராகரிக்கிறது, திறைசேரி மத்திய வங்கியின் விளக்கங்களை நிராகரிக்கிறது.


இது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது. இது நாட்டின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாகப் பாதிக்கும். அதனால் காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் ஆராய்ந்த திறைசேரி அறிக்கையை சபைக்கு சமர்ப்பியுங்கள்.


காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பாக திறைசேரி மேற்கொண்ட அறிக்கையை ஏன் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படாமல் இருக்கிறது என்பதில் பிரச்சினை உள்ளது. ஆகையினால் குறித்த அறிக்கையை உடனடியாகப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.


சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுடன் காணப்படும் இணக்கப்பாடுகள் மற்றும் புரிந்துணர்வுகள் இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன?


நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக நிதி மற்றும் நாணயக் கொள்கைகளைத் தனித்தனியாகவும் ஒன்றோடொன்று தொடர்புடைய முறையிலும் செயற்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பு எவ்வாறு அமைந்து காணப்படுகின்றன?


தற்போது வெற்றிகரமான நிதி மற்றும் நாணயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரதான தடைகள், அபாயங்கள் மற்றும் கட்டமைப்புசார் சிக்கல்கள் யாவை? இந்தத் தடைகளை குறைத்துக் கொள்வதற்கும், பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள அல்லது எடுக்க எதிர்பார்க்கும் நடவடிக்கைகள் யாவை?


கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் கைகொண்ட நிதி மற்றும் நாணயக் கொள்கைகள் காரணமாக பணவீக்கம், வட்டி விகிதங்கள், ரூபாவின் மாற்று விகித பெறுமதிகள், முதலீடுகள், வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவுகள் மீது ஏற்பட்ட விளைவுகள் பற்றிய மதிப்பீடுகள் அரசாங்கத்திடம் காணப்படுகின்றனவா? ஆமெனில், அதன் விபரங்கள் என்ன?


தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்கான நபர் ஒருவரினது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு 17,000 ரூபா போதுமானது என குறிப்பிட்டுள்ளது.


அரசாங்கமும் இதனை கூறி வருகின்றது. ஒரு நபரால் 30 நாட்களுக்கான உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளை  17,000 ரூபா கொண்டு ஈடு செய்து கொள்ள முடியுமா என்பதில் பிரச்சினை காணப்படுகின்றது.


வரிச் சுமை அதிகரிப்பு, அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் வட்டி விகிதக் கொள்கைகளால் நடுத்தர வர்க்கம், தொழில் வல்லுநர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள்,   விவசாயிகள், மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தத்தை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட விசேட திட்டங்கள் யாவை?


இலங்கையின் நிதி மற்றும் நாணயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பாராளுமன்ற மேற்பார்வை மற்றும் பொதுமக்கள் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் யாவை?  என கேட்கிறோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »