Our Feeds


Thursday, June 4, 2026

Admin

நிதி அமைச்சின் நிலைப்பாட்டை ஏற்மாட்டேன் - கடிதத்தை நிராகரித்தார் ஹர்ஷ!



“திறைசேரியில் ஹெக்கிங் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பான அறிக்கை நான்கு வாரங்களைக் கடந்து தனக்கு தனிப்பட்ட ரீதியாகத் தனது தனிப்பட்ட பார்வைக்காக மட்டுமே” எனக் குறிப்பிட்டு நிதி அமைச்சின் செயலாளரால் அரச நிதி பற்றிய குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு அனுப்பிய கடிதத்தை அவர் நிராகரித்துள்ளார்.

அத்துடன், இந்த அறிக்கையை குழுவிடம் இருந்து மறைத்து தனது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக மட்டும் அனுப்ப நிதியமைச்சின் செயலாளர் எடுத்த முயற்சியை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை தொடர்பில் நேற்று (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

குறித்த நிதி மோசடி தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சின் செயலாளருக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு நீண்ட தாமதத்துக்குப் பின்னர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையில் ஒன்லி (ONLY) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது, குழுவின் தலைவர் என்ற ரீதியில் நான் தனிப்பட்ட முறையில் பார்ப்பதற்கு மட்டுமேயான ஒரு விசேட அறிக்கை. அப்படி இருக்க முடியாது அல்லவா? அது எப்படி நடக்கும்? அப்படி என்றால் நான் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்? நான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அந்த மக்கள் என்னிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள்.

தலைவர் என்ற ரீதியில் நிதிக்குழுவில் அரச நிதியைக் கையாளுதல் மற்றும் அந்த அரச நிதியின் பொறுப்பை ஆராய்தல் தொடர்பாக நிதிக்குழுவுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. என்னால் அந்தப் பொறுப்பை தனிப்பட்ட ரீதியில் எடுக்க முடியாது. என்னால் தனிப்பட்ட முறையில் இதற்குப் பொறுப்புக்கூற முடியாது. எனக்கு பொறுப்புக்கூறுவதற்கான சந்தர்ப்பமும் இல்லை. அதற்கான திறனும் இல்லை. நான் எப்படி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்பது?

எனவே, இது எந்த வகையிலும் மக்களிடமிருந்து மறைத்துச் செய்ய வேண்டிய ஒன்றல்ல. உண்மையில், இந்தக் கலந்துரையாடல் மக்களுக்கு திறந்திருக்க வேண்டும். இந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு வழங்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்றுதான் நான் தொடர்ந்து வாதிடுகிறேன்.

இதில் பல்வேறு குழு உறுப்பினர்களிடமிருந்து பல தர்க்கங்கள் எழுகின்றன. குழுவின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த இணக்கப்பாட்டின் அடிப்படையில், இன்று ஒட்டுமொத்த பாராளுமன்றக் குழுவுக்கும் பகிரங்கப்படுத் தக்கூடிய வகையிலான புதிய அறிக்கை யொன்றை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »