Our Feeds


Monday, June 8, 2026

Admin

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விசேட பாதுகாப்பு!


அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, சுரேஷ் சலேயின் பாதுகாப்பிற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்றும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பல குழுக்களும் வைத்தியசாலைக்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இதுவரையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். 

தடுப்புக் காவலில் இருந்த போது தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள்ளேயே உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் சுரேஷ் சலே இன்றிரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »