(க.சிவலிங்கமூர்த்தி)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும் போது, பாராளுமன்ற அறை ஒன்றுக்குள் பதுங்கி, கட்டிலுக்கு அடியில் தூங்குவதைப் போல மௌனமாக இருக்கின்றார் இது நாட்டு மக்களிடையே பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் அமைந்துள்ள டி.பி.இலங்கரத்ன அரங்கின் வளாகத்தில் நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
விமல் வீரவங்ச உள்ளிட்ட தரப்பினரால் புறக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் சத்தியாக்கிரக போராட்டம், மக்களின் தனிப்பட்ட எதிர்ப்பினாலும் சுயாதீனமான தலையீட்டினாலும் தற்காலிகமாக கைவிடப்பட்டு, பின்வாங்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பிஸ்கட்டுகளை சாப்பிட்டுக்கொண்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் புதிய போராட்ட முறைகளை நாட்டுக்கு கற்றுக்கொடுத்த, சிறைக்குச் செல்ல பயந்து நடுங்கும் குற்றவாளிகளே இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து நாடகமாடுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் என்பது, தங்களின் அரசியல் சதித்திட்டங்களுக்காகவும், அதிகார பேராசைக்காகவும், தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த அப்பாவி பிள்ளைகள், தாய்மார்கள் மற்றும் தந்தையர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த ஒரு சம்பவமாகும் என்பதை மக்கள் தற்போது தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர். ஆரம்பத்தில் தனித்தனியான சம்பவங்களாக தெரிந்த விடயங்கள், தற்போது ஒரே நேர்க்கோட்டில் தெளிவாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஒருபுறம் முஸ்லிம் தீவிரவாத இளைஞர் குழுவொன்று சிறையில் இருந்த போது, அப்போதைய இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மூலமாக அந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. நாட்டின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, அந்த தற்கொலை குண்டுதாரி குழுவை தங்களுக்கு சாதகமான காலம் கணியும் வரை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான பின்னணியை வழங்கி, தரவுகளை பரிமாறிக்கொண்டுள்ளனர் என்பது தற்போது நீதிமன்றம் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் மூலம் அம்பலமாகி வருகின்றது. தேவாலயங்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள், எப்போது வருகிறார்கள் என்ற உளவுத் தகவல்களை திரட்டுவதற்கு சுரேஷ் சலே தலைமையிலான குழுவினர் இவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளனர்.
சுரேஷ் சலேயை அரசியல் ரீதியாக பயன்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரே ஆவர். இந்த கொடூர தாக்குதல் நடந்து சில நாட்களிலேயே, கோட்டாபய ராஜபக்ஷ தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என அறிவித்தார். தாக்குதல் நடந்து 3 நாட்களுக்குள் மஹிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பிள்ளையானை (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது.
தற்போது நாமல் ராஜபக்ஷ இதுவொரு பிரச்சினையா என வினவுகின்றார். நாமல் ராஜபக்ஷவின் வீட்டைப் பாதுகாக்கும் பிரச்சினை இதுவல்ல. இந்த தாக்குதலில் 200 க்கும் மேற்பட்ட இலங்கை மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர், 500 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து இன்றும் வேதனையை அனுபவித்து வருகின்றனர். மக்களின் இந்த கண்ணீரின் மீதே ராஜபக்ஷவினர் அரசியல் விளையாட்டை நடத்த முற்பட்டனர். இதனாலேயே மக்கள் இந்த புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தனர்.Geographic Reference
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டதைப் போல, இது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் ஆண்டாகும். நீண்டகாலமாக எவ்வித அச்சமும் இன்றி திரிந்த சுரேஷ் சலே போன்றவர்கள் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டவுடன், இந்த அரசியல் குற்றவாளிகள் பதற்றமடைந்துள்ளனர். சுரேஷ் சலேயிற்கு கட்டளையிட்ட சூத்திரதாரி யார் என்பது வெளிச்சத்திற்கு வரும் போது, அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் கூட்டத்தினர் கலக்கமடைந்துள்ளனர். எனினும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, இந்த அரசியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் வரை அரசாங்கமும் மக்களும் பின்வாங்கப் போவதில்லை.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது,; எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நடுங்கத் தொடங்கியுள்ளார். நாட்டில் எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் முகநூல் நேரலை மூலமாகவோ அல்லது ஊடகவியலாளர் சந்திப்புகள் மூலமாகவோ சர்வதேச தரவுகளைக் கூறி பாராளுமன்றத்தில் கூட நாட்டுக்கு அறிவுரை வழங்கும் சஜித் பிரேமதாஸ, தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும் போது, பாராளுமன்ற அறை ஒன்றுக்குள் பதுங்கி, கட்டிலுக்கு அடியில் தூங்குவதைப் போல மௌனமாக இருக்கின்றார். ஊமையை போல அவர் ஒரு வார்த்தையேனும் பேசாமல் மௌனம் காக்கின்றார். இது நாட்டு மக்களிடையே பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
உண்மையில், இந்த விடயத்தில் சஜித் பிரேமதாச தனது சர்வதேச அறிவைப் பயன்படுத்தி கருத்துக்களை முன்வைத்திருக்க வேண்டும். சஜித் பிரேமதாசவின் சகோதரி சட்டவிரோதமான முறையில் பணத்தை கையாண்ட போது, தாம் தலையிட்டு அதனை தீர்த்து வைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பகிரங்கமாக கூறியிருந்தார். எனவே, இந்த சட்ட நடவடிக்கைகள் எந்நேரத்திலும் தங்கள் பக்கமும் திரும்பலாம் என்ற பயத்திலேயே அவர்கள் மௌனம் காக்கின்றனர்.
அரசாங்கம் புலனாய்வு மற்றும் விசாரணைப் பிரிவினருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அரசியல் தலையீடுகள் இன்றி அதிகாரிகள் சுயாதீனமாக செயற்படுவதனாலேயே விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் வழங்கிய ஆணையின்படி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் இறுதி இலக்கை நோக்கி அரசாங்கம் உறுதியாக பயணிக்கும் என்றார்.
