Our Feeds


Thursday, June 11, 2026

Zameera

சட்டத்தின் முன் அனைவரும் சமம் - சுனில் ஹந்துன்னெத்தி


 (செ.கவிஷனா)


கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், செல்வாக்கு அல்லது அரசியல் அதிகாரம் கொண்ட எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் பொறுப்புக்கூற வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.


கொழும்பில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கடந்த காலங்களில் போலன்றி தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட்டு வருவதுடன் சிறைச்சாலைகளில் யாருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்பட மாட்டாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான சுரேஷ் சலே மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து போன்ற செல்வாக்கு உடையவர்களை கைது செய்ய முடியாது என பேசப்பட்ட போதிலும் சட்டம் தன் கடமையை செய்யும் போது எவரும் தப்ப முடியாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஆட்சிக் காலங்கள் போன்று அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டதுடன், போலியான உடல்நலக்குறைபாடுகள் காரணங்காட்டி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாறும் சலுகை கலாச்சாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் முற்றிலும் சட்டபூர்வமானவை என்பதால், இதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்திற்குச் சென்றுதான் தீர்க்க வேண்டும். அதை விடுத்து வீதிகளில் இறங்கி அரசியல் ஆதாயத்திற்காகப் போராட்டம் நடத்துவது, அவர்களது கடந்த காலத் தவறுகளையே அவர்களுக்கு நினைவூட்டும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நபர்கள் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக ஆளும்தரப்பிற்கு தாவும் மோசமான அரசியல் கலாச்சாரம் நிலவிய போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அத்தகைய அரசியல் நாடகங்களுக்கு இடமில்லை. சட்டம் மற்றும் நீதிமன்ற விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித தலையீடுகளையும் செய்யாது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அத்துடன் தங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணர்ந்துகொண்ட அரசியல்வாதிகள் சத்திமிடுவதும் அரசாங்கத்தின் மீது ‘அரசியல் பழவாங்கல்’ என்ற பழியைச் சுமத்துவதும் தங்களை சமூகத்தின் முன்னிலையில் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஆகும்.


குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் தங்களது அரசியல் பலத்தை பயன்படுத்தி வழக்குகளிலிருந்து தப்பிக்க முயலும் என்ற காலம் முடிவுக்கு வந்துவிட்டது.


அதேபோல், தற்போதைய எதிர்க்கட்சியினருக்கு ஆட்சியை பிடிப்பதற்கான எந்தவொரு முறையான திட்டமோ, மக்களின் ஆதரவோ இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழற்றது என்ற மக்களின் நம்பிக்கையை சிதைப்பதே எதிர்க்கட்சியினரின் முக்கிய நோக்கமாக உள்ளது. தங்களை போல் தற்போதைய அரசாங்கமும் ஊழல் நிறைந்தது என காட்டி மக்கள் தவறான முடிவை எடுத்துவிட்டார்கள் என்று நிரூபிப்பதற்கு போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. கடந்த காலங்களில் பாராளுமனறத்தில் பெரும் சர்சையை ஏற்படுத்திய 323 கொள்கலன்கள் தொடர்பான விவகாரம் மற்றும் நிலக்கரி கொள்வனவு ஊழல் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் பின்னர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர் ஆதாரங்களையும் வாக்குமூலங்களையும் வழங்காது அமைதியாகிவிட்டனர். அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைத் தகவல்களை திருடி தாங்கள் அவற்றை கண்டுபிடித்தது போன்று எதிர்கட்சியினர் நாடகமாடி வருவதுடன் கடந்த கால சொசுகு வாழ்க்கை மற்றும் அதிகாரம் பறிபோனதால் ஏற்பட்டுள்ள விரக்தியை இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர். நாமல் ராஜபக்சவின் போராட்டம் மற்றும் பெளத்த மதகுருமார்களின் மாநாடுகளுக்கு மக்களின் ஆதரவு சரியாக கிடைக்கவில்லை என்பதுடன் தேசிய மக்கள் சக்தியின் மே தினப்பேரணிக்கான மக்கள் ஆதரவு, எதிர்க்கட்சியினருக்கு எந்தவொரு மக்கள் அடித்தளமும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு 2048 ஆம் ஆண்டு வரைக்கும் பொறுத்திருக்க வேண்டும் என கடந்த கால ஆட்சியாளர்கள் கைவிரித்த நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பதவியேற்று 18 மாத காலத்திற்குள் எந்தவொரு புதிய கடன்களையும் பெறாமல், இதுவரை 8 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான வெளிநாட்டுக்கடன்களை செலுத்தியுள்ளது என்பது சாதனையாகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »