போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்று (25) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையின் நோக்கம் ஒரு நாகரீகமான நாட்டை கட்டியெழுப்புவதாகும் என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எவர் மீதும் தனிப்பட்ட பழிவாங்கல்கள் இடம்பெறாது எனவும், ஜனாதிபதி முதல் அடிமட்ட அரசியல் தலைமை வரையிலும், ஜனாதிபதி செயலாளர் முதல் அடிமட்ட அரச அதிகாரி வரையிலும் உள்ள அனைவரும் இந்த நாகரீகமான நாட்டின் பங்காளிகளாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அதேபோல், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுதமேந்திய குழுக்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் தற்போது பல வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இன்று நாடு நீண்டகால நிலையான பயணத்தை நோக்கி கால்பதித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:
போதைப் பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் நீண்டகாலமாக வளர்ச்சியடைந்து சமூகத்தை பீதிக்குள்ளாக்கி வருவதோடு போதைப் பொருட்களினால் சமூகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போதைப் பொருளை முற்றாக ஒழிப்பதற்கும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒடுக்கவும் பங்களிப்பது அனைவரினதும் பொறுப்பாகும். குறிப்பாக, இந்தப் போதைப் பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் உருவாகுவதும் வளர்ச்சியடைவதன் பின்னணியில் தொடர்புள்ள பாரிய வலையமைப்பு உள்ளது.
இந்தப் போதைப் பொருட்களையும் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஒடுக்குவதற்கு அதனுடன் தொடர்புள்ள முழுமையான துறை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். திட்ட மிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளோர் போதைப் பொருள் வர்த்தகர்கள் அரச நிறுவனங்கள் மற்றும் அரசியல் அதிகாரத்திற்குள் பரவியிருந்து மோசடி, அரசிற்குள் இயங்கிய அரச தரப்பு நோக்கிலான அமைப்புகள் மற்றும் அரசியல் அனைத்தையும் ஒடுக்குவதன் ஊடாகத் தான் இதனை ஒழிக்க முடியும்.
போதைப் பொருள் சுற்றிவளைப்பு மற்றும் பாதாள உலகத்தினரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் மாத்திரம் போதுமானதல்ல. நான் முன்னர் குறிப்பிட்ட தலையீடுகளினால் தான் இவை வளர்ச்சியடைந்தன. இவை அனைத்தையும் ஒழிக்க நாம் முடிவு செய்துள்ளோம். இந்த பணியில் பாரியளவு பங்காற்றும் தரப்பினர் உள்ளனர். துரதிஸ்டவசமாக எதிர் கட்சியின் பிரதான குற்றவாளிகளாக அவர்கள் மாறியுள்ளனர். இந்த மோசடி, திட்டமிட்ட குற்றச் செயல்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள், அரச பொறிமுறைக்குள் செயற்பட்ட குற்றச் செயல்கள்,அரசியல் என அனைத்தையும் ஒடுக்க வேண்டும். இதனை ஒடுக்குவதற்குத் தேவையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதற்கான அரச நிறுவனங்களும் உள்ளன. நிறுவனங்கள் இருந்து பயனில்லை அந்த நிறுவனங்களுக்கு நேரடித் தலைமைத்துவம் வழங்கி அதனை தோற்கடிக்கக் கூடிய அரச பொறிமுறை எமக்கு அவசியம். ஆனால் துரதிஸ்டவசமாக இந்தப் பணிக்கு அர்ப்பணிக்கும் நபர்கள் தான் இன்று எதிரணியின் பிரதான எதிரிகளாகவும் இலக்காகவும் மாறியுள்ளனர்.
இந்தப் பணியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சானி அபேசேகர பெரும் பங்காற்றுகிறார். அவர் எதிர்த் தரப்பின் எதிரி. இதில் இலஞ்ச ஊழல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க பாரிய பங்காற்றுகிறார். அவரும் எதிரணியின் எதிரி. இந்தப் பணியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பெரும் பங்காற்றுகிறார். அவரும் எதிரணியின் எதிரியாக உள்ளார். அதே போன்று அமைச்சர் ஆனந்த விஜேபால பெரும் பங்காற்றி வருகிறார். அவரும் எதிரணியினால் எதிரியாகப் பார்க்கப்படுகிறார். இந்தப் பணியில் சட்டமா அதிபர் திணைக்கள திலீப பீரிஸ் அதிக பங்காற்றுகிறார். அவரும் எதிரிணியின் எதிரி. இதில் நீதிமன்றம் பெரும் பங்குவகித்து வருகிறது. நீதிமன்றமும் இன்று எதிரிணியின் எதிரியாகியுள்ளது. அது ஏன்? நீதி, நியாயம், நாகரிகத்தை ஏற்படுத்த ஏற்படுத்தும் முயற்சியை எதிரிணியால் ஜீரணிக்க முடியவில்லை. நீதி, நியாயம்,ஜனநாயகம்,நல்லாட்சி எதுவும் எதிரணிக்கு பிடிக்கவில்லை. இது தான் உண்மை.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரச அனுசரணையுடன் குற்றம் செய்த நபர்களை அம்பலப்படுத்தத் தேவையில்லையா? அது காட்டிக் கொடுப்பா அல்லது தேசத் துரோகமா? இல்லை .அது நாகரிகமான நாடொன்றை உருவாக்குவதற்கான நோக்கமே அதிலுள்ளது. எமது நாட்டை நாகரிகமான நாடாக மாற்ற வேண்டும். ஜனாதிபதி முதல் அடிமட்டத்தில் உள்ள அரசியல் தலைமை வரையும் ஜனாதிபதி செயலாளர் முதல் அடிமட்ட அரச உத்தியோகஸ்தர் வரைக்கும் அனைவரையும் நாகரிகமான நாட்டின் பங்காளர்களாக மாற்ற வேண்டும். ஆனால் எமது நாடு அநாகரிகமான நாடாகவே இருந்தது. எமது இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவு தோடர்பிலான கௌரமும் பாராட்டும் எமது உள்ளங்களில் இருக்கிறது. ஆனால் எமது இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் செயலாற்றி இருக்கையில் எங்காவது அவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் நாம் அவர்களுக்காக முன்நிற்போம்.
தேசிய மட்டத்திலோ சர்வதேச மட்டத்திலோ நாட்டின் இருப்பிற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் எமது இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் செயலாற்றியிருக்கும் நிலையில் அவர்களை எந்த இடத்திலும் பாதுகாக்கவும் கௌரவிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அதனை மேற்கொள்வோம். ஆனால் எமது இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவில் உள்ள சில குழுக்கள் அரசாங்கத்தின் தேவைக்காக ஏதாவது குடும்பத்தின் அதிகாரத்திற்காக அல்லது ஏதேனும் அரசியல் தரப்பின் அதிகாரத்திற்காக செயற்பட்டிருந்தால் அதற்கு உரிய தண்டனை வழங்கவும் எமது அரசாங்கம் பின்நிற்காது. எமது இராணுவத்தின் கௌரவித்திற்காவும் நாகரிகமான நாட்டை கட்டியெழுப்புவதற்காகவும் எமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் இதனை செய்ய வேண்டும்.
எமது நாட்டில் அப்படியான சம்பவங்கள் நடக்கவில்லையா? லசந்த விக்ரமதுங்க எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்? அது சாதாரண சிவில் குடிமக்களுக்கு இடையிலான மோதல் அல்ல. அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஊடகவியலாளர் படுகொலை செய்யப்படுகிறார். அறிக்கைகளின்படி, புலனாய்வுப் பிரிவினர் அதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை மறைக்கப்பட வேண்டுமா? தேவையில்லை. கீத் நோயர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்படுகிறார். அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தது இராணுவத்தின் ஒரு பாதுகாப்பு விடுதி என்று தெரிவிக்கப்படுகிறது. உபாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. போத்தல ஜயந்த மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாமல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இவை சிவில் மோதல்கள் அல்ல. இவை ஒரு அரசு, தனது அதிகாரத்தை ஒரு குடும்பத்திற்காகவும் தனது அரசியல் முகாமின் அதிகாரத்திற்காகவும் செய்த குற்றங்களாகும். தாஜுதீனின் படுகொலையும் அவ்வாறானது தான். உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அவ்வாறானது தான்.
சிரச நிறுவனத்திற்குத் தீ வைக்கப்படுகிறது.இறுதின காரியாலயங்களுக்குத் தீ வைக்கப்படுகிறது. சியத நிறுவனத்தின் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. இப்படியொரு வரலாறு இருக்கிறது. இவை அனைத்திற்கும் பின்னால் மிகச் சிறியதொரு அரச இயந்திரத்தின் செயற்பாட்டாளர்கள் இருந்தார்கள். இதனை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டாமா?
நாட்டில் "வெள்ளை வேன்" பீதி இருக்கவில்லையா ? இலக்கத் தகடுகள் இல்லாத வெள்ளை வேன்களில் வந்து, தோட்டத்தில் தங்களது வீடுகளை உடைப்பதற்கு எதிராகப் போராடியவர்கள்
கடத்திச் செல்லப்படவில்லையா? இவை சாதாரண சிவில் மோதல்கள் அல்ல. அப்படியாயின் இவை என்ன? இவை ஒரு அரசு, நாட்டின் பாதுகாப்பிற்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும், அரசின் இருப்பிற்காகவும் பாதுகாக்க வேண்டிய படைகளின் மிகச் சிறியதொரு குழுவை, தங்களது அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தி நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளும் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை செய்துள்ளனர்.
நாம் நிச்சயமாக அந்தக் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளுக்கும் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கும் எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதற்குக் கடமைப்பட்டுள்ள ஒரு அரசாங்கமாவோம். ஏன்? அந்தப் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காக நாம் இதனைச் செய்ய வேண்டும். இராணுவத்தின் கௌரவித்திற்காக நாம் இதனைச் செய்ய வேண்டும். அதேபோன்று, அரசின் நாகரிகத் தன்மைக்காக நாம் இதனைச் செய்ய வேண்டும். இங்கு எவரேனும் இதற்கு எதிராக இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. உங்களால் இதற்கு எதிராக இருக்க முடியுமா?
இல்லை, இதற்கு எதிராக இருக்க முடியாது. இதனை குற்றவாளிகளினால் மாத்திரமே எதிர்க்க முடியும். அந்தக் குற்றங்களின் மூலம் பலன் பெற்றவர்கள் மாத்திரமே. அந்தக் குற்றங்களின் மூலம் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டவர்கள் மாத்திரமே எதிர்க்க முடியும். அந்தக் குற்றங்களின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குக் காத்திருந்தவர்கள் மாத்திரமே. வேறு எந்தவொரு சாதாரண பிரஜைக்கோ, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் மனிதர்களின் மனிதத்தன்மை மீதான கௌரவத்தைக் கொண்டுள்ள எந்தவொரு பிரஜைக்கோ இந்த விசாரணைகளுக்கு எதிராக இருக்க முடியாது.
ஷானி அபேசேகர , திலீப பீரிஸ், அதேபோன்று பொலிஸ் மா அதிபர் , அதேபோன்று நீதிமன்றத்திற்கு, ரங்க திஸாநாயக்க மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதற்காக? அவர்கள் செய்த குற்றம் என்னவென்று எனக்குக் கூறுங்கள். அவர்கள் செய்த குற்றம் என்னவெனில், இந்நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவதும், அது குறித்து விசாரணை செய்வதுமேயாகும். அதற்காக அவர்கள் குற்றவாளிகள் கிடையாது.
எனவே யாராவது ஒரு நபர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இந்த அதிகாரிகளை தனித்தனியாக அச்சுறுத்தி, தனித்தனியாகப் பயமுறுத்தி, இந்த முயற்சியை நிறுத்திவிட முடியும் என்று யாராவது நினைத்தால், இந்த முயற்சியை நிறுத்துவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க மாட்டோம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாங்கள் அவர்களுக்காக முன்னிற்போம்.
இந்த நாட்டின் பொது மக்கள் அவர்களுக்காக எழுந்து நிற்க வேண்டும். இந்த குற்றவாளிகளுக்காகவா முன்னிற்கிறீர்கள்? நாங்கள் இந்த நாட்டின் பொது மக்களுக்காக முன்னிற்க வேண்டும். அதற்காக நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
அதேபோன்று, இதனுடன் பிணைக்கப்பட்ட ஒரு அரசியல் இருந்தது. குற்றவாளிகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காக பணம் பெறுகிறார்கள். ஒருவர் கைது செய்யப்பட்டால் முறையான வழிமுறையின்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், கொல்வதற்காக பணம் பெறுகிறார்கள். மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகக் கூறி பணம் பெறுகிறார்கள். அதற்கு கட்சி பேதமில்லை . அவை என்னவென்று உங்களுக்கு வெளிப்படும் . கொல்லாமல் இருக்க பணம் கொடுக்கப்பட்டது. மரணத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள பணம் கொடுக்கப்பட்டது.பி.டி.ஏ யில் இலிருந்து அகற்றுவதற்கு பணம் கொடுக்கப்பட்டது. இப்படித்தான் அரசியல் கட்டமைப்பு இவற்றுடன் தொடர்புபடுகிறது.
இவை காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்றுசிலர் நினைத்தார்கள் . காலப்போக்கில் இவற்றை மறக்கடிக்க இடமளிக்க மாட்டோம். குற்றவாளிகளை முறையான வகையில் சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் எமது அரசாங்கத்தின் பொறுப்பு. விசாரணை செய்து, கைது செய்து, சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக நாங்கள் தண்டனையைப் பெற்றுக்கொடுப்போம். ஆனால் கைது செய்யப்படுபவர்களைக் கொலை செய்யும் ஒரு வரலாறு இருந்தது. கொலையிலிருந்து காப்பாற்றுவதற்காகக் கப்பம் பெற்ற ஒரு வரலாறு இருந்தது. இன்று காலை கைது செய்யப்பட்ட குழுவின் ரகசியங்கள் என்னவென்று அம்பலமாகும். இனிமேலும் இது போன்றவர்களை உங்கள் கட்சியில் வைத்திருப்பீர்களா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
அதேபோல், சிறைச்சாலையிலிருக்கும் ஒரு போதைப்பொருள் வியாபாரியுடன் தொண்ணூற்று இரண்டு தடவைகள் ஒரு அரசியல் தலைவர் பேசியிருக்கிறார். 54 தடவைகள் அவர் அழைப்பெடுத்துள்ளார். ஏனைய அழைப்புகள் அவரிடமிருந்து இவருக்கு வந்திருக்கின்றது. இவ்வாறானவர்களை இன்னும் உங்கள் கட்சியில் வைத்திருக்கிறீர்களா ? குறைந்தபட்சம் கட்சிக்குள் ஒழுக்காற்றுப் பரிசோதனையாவது செய்தீர்களா என்று எனக்குத் தெரியாது. இந்த அரசியல் அதிகாரம், இந்த போதைப்பொருள், இந்த போதைப்பொருள் கடத்தல், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை வளர்ப்பதற்காகத் துணையாக இருந்திருக்கின்றது. நாங்கள் முழுமையாக அரசியல் அதிகாரம் இதற்கு வழங்கும் பாதுகாப்பை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவோம். யாரும் இதனை அரசியல் பழிவாங்கல் என்று கூற வேண்டாம்.
எங்களுக்கு எதற்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது? எமக்கு வழங்கப்பட்ட பாரிய மக்கள் ஆணைக்குள் ஒரு நோக்கம் இருந்தது. எமது அரசை நாகரீகமானதாக மாற்றுவது தான் அந்த நோக்கமாகும்.. இந்த பாராளுமன்றம் நாகரீகமானதாக இருக்க வேண்டும். செவிமடுக்க வேண்டும், விடயங்களை முன்வைக்க வேண்டும். நாகரீகமான போக்கு இங்கு தேவைப்படுகின்றது. நாகரீகமான தன்மை இல்லாமல் போவது ஏன்? உங்களுக்கு நேரடியான தலைமைத்துவம் தேவை . உங்களுடைய உத்தரவுகளுக்கு எம்.பிகள் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டும் . ஆனால் இந்தப் பாராளுமன்றத்தை அநாகரீகமான நிலைக்கு மாற்றியிருக்கிறார்கள் . நாட்டின் அரசியலையும் அநாகரீகமான நிலைக்கு மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் இந்த நாட்டை நாகரீகமான பாதைக்குக் கொண்டு வரும் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்றத்திலும் அரச நிறுவனங்களுக்குள்ளேயும் இவை அனைத்திற்குள்ளுமே மீண்டும் நாகரீகத்தைக் கொண்டுவரும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஊழல் குறித்து நீண்ட காலமாக எமது தேர்தல் மேடைகளில் விவாதிக்கப்பட்டது. ஊழல் செய்த பணம் எவ்வாறு வெளியேற்றப்பட்டது என்று நாம் வெளிப்படுத்தியுள்ளோம். பொதுவாக டி.டி. முறையின் ஊடாக பணம் செலுத்தப்பட்டும் பொருட்கள் வரவில்லை. 2023 இலிருந்து இதுவரையான காலப்பகுதியில் டி.டி. ஊடாகக் டொலர் பில்லியன் வரை முற்கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொருட்கள் வரவில்லை. டொலர் பில்லியன் என்பது சுமார் 300 பில்லியன் ரூபாய். 300 பில்லியன் ரூபாய் பணத்தை சாதாரண ஒருவரால் கொண்டுசெல்ல முடியாது. சாதாரண ஒரு வர்த்தகரால் 300 பில்லியனை நாட்டிலிருந்து கடத்த முடியாது. ஆனால் கடத்தியிருக்கிறார்கள். இதற்குள் போதைப்பொருள் பணம் இருக்கின்றது, ஊழலால் சம்பாதித்த பணம் இருக்கின்றது, குற்றங்களால் சம்பாதித்த செல்வம் இருக்கின்றது. அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டொலர் பில்லியனுக்கும் அதிகமான தொகை அனுப்பப்பட்டும் இலங்கைக்குப் பொருட்கள் வரவில்லை. இரண்டு வருடங்களுக்கு நெருக்கமான காலம் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன அதைத் தடுப்பதற்காக தற்போது விதிமுறைகளை மேற்கொண்டிருக்கிறோம் .
இதில் சில வங்கிகளின் தொடர்புகள் இருக்கின்றன. சில வங்கிக் கிளைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு பணம் கடத்தப்பட்டிருக்கின்றது . சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம்.விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன . ஊழலால் சம்பாதிக்கப்பட்ட செல்வம்தான் டொலர் ஊடாக வெளியே சென்றிருக்கின்றது. இலங்கைக்குள் சம்பாதிப்பது ரூபாய்களில் இருக்கலாம், ஆனால் நாட்டிலிருந்து டொலர்களாக கடத்தியிருக்கிறார்கள். அதனால் இந்த நாட்டின் பொருளாதாரமும், சமூகக் கட்டமைப்பும் வீழ்ச்சியடைவதற்கு அந்த ஊழல்கள் துணையாக இருந்திருக்கின்றன. அவற்றுக்கு எதிராக விசாரணைகள் செய்ய வேண்டுமல்லவா?
யாருடையதும் தனிப்பட்ட பழிவாங்கல், தனிப்பட்ட கோபத்தைத் தீர்த்துக்கொள்ளும் தேவை எங்களுக்கு இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வருடங்களாகின்றன. பழிவாங்குவதாக இருந்தால் அதிகாரத்திற்கு வந்தவுடன் பலிவாங்கியிருக்க வேண்டும்.இது பழிவாங்கல் அல்ல. இந்த பாராளுமன்றத்தினால் ஊழல், இலஞ்சத்தை ஒழிப்பதற்காகச் சக்திவாய்ந்த சட்டங்கள் இயற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை செயற்படுத்த காலம் தேவைப்படுகின்றது. அதை விசாரணை செய்வதற்காக நிறுவனங்கள் நிறுவப்பட்டன. சில புலனாய்வு நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்திருந்தன.அந்தப் புலனாய்வு நிறுவனங்கள் வலுப்படுத்தியுள்ளோம். சட்டமா அதிபர் திணைக்களத்திற்குப் புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளோம். நீதிமன்றத்தில் பெருமளவு வழக்குகள் தேங்கியுள்ளன. புதிதாக ஏழு மேல் நீதிமன்றங்களை உருவாக்கினோம். இந்தச் செயல்முறையை விரைவுபடுத்தி முறையான வகையில் நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டிப்பதுதான் எமது எதிர்பார்ப்பு. அதை பழிவாங்கல் என்று கூற முடியுமா? அது முறையான, சட்டபூர்வமான வழிமுறையொன்றினூடாக இந்த நாட்டின் ஊழல்வாதிகளைத் தேடிச் செல்கிறோம், ஊழல்வாதிகளை நீதிமன்றத்தின் முன்நிறுத்துகிறோம்.
ஊழலால் சம்பாதிக்கப்படும் செல்வம், பாதாள உலக, இந்த போதைப்பொருள் வியாபாரிகளுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக இல்லை. போதைப்பொருள்
பணம், குற்றவாளிகளின் பணம், ஊழலால் சம்பாதிக்கப்படும் பணம் என அனைத்துப் பணமும் டி.டி. ஊடாக, வெளியில் சென்றிருக்கின்றது.
எனவே நாங்கள் இந்த ஊழலை ஒழிப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளில் பிரதான பொறுப்பை இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு நிறைவேற்றி வருகிறது. அதேபோல் எப்.சி.ஐ.டி. நிறுவனத்தினால் , சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த நிறுவனங்களிலிருக்கும் புகழ்பெற்ற, அதற்காகத் தலையிடும் அதிகாரிகளைப் பின்தொடர்ந்து சென்று எதிரணி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. கொள்ளையடிக்க இடமளியுங்கள், கொள்ளையடிக்கும் நபரைத் தண்டிக்க வேண்டாம் என்ற செய்தியைத்தான் இவர்கள் தருகிறார்கள்.
பொதுமக்களின் செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களுக்குத் தண்டிக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு கட்சி பேதம் இருக்கவில்லை . பொதுமக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்த நபரைத் தண்டிப்பது குறித்து கட்சி பேதம் இருந்ததா? வடக்கா தெற்கா என்று பேதம் இருந்ததா? பொது மக்களின் எதிர்பார்ப்பு அது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை முன்னிறுத்தி அரசாங்கங்களுக்கு வாக்களிக்கிறார்கள், ஆனால் அரசாங்கம் குறுகிய காலத்தில் அதே திருட்டிலுயே ஈடுபடுகின்றது. நாங்கள் அப்படிச் செய்யமாட்டோம். நாங்கள் இந்த நாட்டின் பொது மக்களுக்கு ஊழல், மோசடி குறித்துத் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக இருக்கும் எதிர்பார்ப்புக்கு உயிர் கொடுக்கும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறியிருக்கின்றது, மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
அந்த விசாரணைகளுக்காகப் பங்களிக்கும் அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும், சில உயிராபத்துக்களை எதிர்கொண்டுதான் அவர்கள் இந்த விசாரணைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதன்படி பெருமளவிலானோருக்கு எதிராக பிடியாணை பெறப்பட்டுள்ளது. பெருமளவிலானோர் இன்று நீதிமன்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தப்பியோடியிருக்கிறார்கள். இது பழிவாங்கல் அல்ல. இது மிகவும் நியாயமான முறையில் அந்த குற்றவாளிக்கும் தன்னைப்பற்றியிருக்கும் விடயங்களை மிகவும் நன்றாக நீதிமன்றத்தில் முன்வைத்து விடுதலையாகும் உரிமை இருக்கின்றது. ஆனால் ஏழு எட்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்து நாட்டிற்கு வரவழைப்பதற்காக அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்கிறோம். இந்தக் குற்றவாளிகளை இலங்கை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அதேபோல் சில சாட்சியாளர்கள், இலங்கையிலிருந்து சாட்சியமளிக்கப் பயந்திருக்கிறார்கள். சில சாட்சியாளர்கள் இலங்கைக்கு வந்து சாட்சியமளிக்கப் பயம் என்று கூறுகிறார்கள். வேறு நாட்டிலிருந்து சாட்சியமளிக்க வாய்ப்புக் கேட்கிறார்கள். தற்போது நாங்கள் அதற்கான சட்டம் இயற்றியிருக்கிறோம். அதன்படி நாங்கள் அந்த நாடுகளில் இருக்கும் தூதரகங்களுக்கு எமது அதிகாரிகளை அனுப்பி அந்தச் சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்களை விசாரிக்க இப்போது ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு அதற்காகச் செல்வதற்கு எதிர்பார்க்கிறோம் .
பாதாள உலகத்தையும் போதைப்பொருளையும் பின்தொடர்ந்து அழிப்பதற்கு எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாங்கள் அதற்காகப் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எமது அரசாங்கம் வந்ததன் பின்னர் 3390 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 304 கிலோ கொகெய்ன் பிடிபட்டுள்ளது. அதேபோல் ஐஸ் கிலோ 5543 கைது செய்திருக்கிறோம். குஷ் கிலோ 1521 கைது செய்திருக்கிறோம். 5,110,735 போதை மாத்திரைகள் கைது செய்திருக்கிறோம். 2,454,267 போதை குப்பிகள் கைது செய்திருக்கிறோம். போதைப்பொருட்களைக் கைப்பற்ற நாம் பாரிய முயற்சி மேற்கொள்கிறோம். குறிப்பாக எமது கடல் எல்லையில் எமது கடற்படை பாரிய பொறுப்பை நிறைவேற்றுகின்றது. அண்மைக்காலத்தில் பலநூறு கிலோ போதைப் பொருட்களை கைது செய்திருக்கிறோம். விமான நிலையம், துறைமுகம், தபால் ஊடாக என நாம் அனைத்து வழிகளையம் அடையாளம் கண்டு முறியடிப்பதற்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம்.
தராதரம் பார்க்காமல் பல்வேறு நபர்கள் சிக்கியுள்ளனர். வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ளனர். நம் நாட்டில் பெரும் மரியாதைக்குரிய துறைகளாகக் கருதப்படும் பிரிவுகளைச் சேர்ந்த குழுக்கள் சிக்கியுள்ளன. பாதாள உலகத்தினர் சிக்கியுள்ளனர். அரச அதிகாரிகள் சிக்கியுள்ளனர். எந்தவொரு துறை சார்ந்த பாகுபாடுமின்றி, பாதாள உலகத்திலிருந்து ஆரம்பித்து சமூகத்தில் பெரும் மரியாதைக்குரிய நபர்கள் வரை, இந்த அனைத்துத் தரப்பினரும் இந்த சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக நாம் பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.
அதேபோல், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்காக நாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 23 பேரை நாம் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளோம்.
அதேபோன்று, இந்த போதைப்பொருள் கடத்தல்களுடன் பல்வேறு வழிகளில் தொடர்புடைய மேலும் 35 பேரை வெளிநாடுகளில் வைத்து கைது செய்து இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளோம். இதுவரை 58 பேரை வெளிநாடுகளில் வைத்து கைது செய்து நாம் இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளோம். அதேபோன்று, சிலர் சிறைச்சாலைகளிலிருந்தே இவற்றை இயக்கி வந்ததை நாம் அறிவோம்.
நாங்கள் விசேட பாதுகாப்புடன், கைதிகளுக்குத் தேவையான வசதிகள் மிகச்சரியான முறையில் உள்ளவாறான விசேட சிறைச்சாலை ஒன்றை அமைத்துள்ளோம். கைதி ஒருவருக்கு இருக்க வேண்டிய மிகச்சிறந்த பாதுகாப்பு மற்றும் வசதிகளுடன், அதேநேரம் வெளித்தரப்பினருடனான கொடுக்கல் வாங்கல்களை முழுமையாக முடக்கும் வகையிலான ஒரு புதிய சிறைச்சாலையை நாம் வெலிசறையில் அமைத்துள்ளோம்.
பிரதான குற்றவாளிகளை நாம் அந்த வெலிசறை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்கிறோம். அங்குள்ள அனைத்துத் தகவல் தொடர்பு வலையமைப்புகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்கள் சிறைக்குள்ளிருந்து கொண்டு இவற்றை இயக்கியிருந்தால், தற்போது அதனை பெருமளவிற்கு முடக்கியுள்ளோம். வெளிநாட்டிலிருந்து இயக்கப்பட்டவை கணிசமான அளவிற்கு முடக்கப்பட்டுள்ளன. சிறைக்குள்ளிருந்து இயக்கப்பட்டவை முடக்கப்பட்டுள்ளன. குடிவரவுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் , சுங்கம் போன்ற நிறுவனங்களிலிருந்து வழங்கப்பட்ட ஆதரவுகள் கணிசமான அளவிற்கு முடக்கப்பட்டுள்ளன. எனவே, எமது போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அதனுடன் பிணைந்துள்ள திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்காக எடுக்கப்பட வேண்டிய மிக வலுவான பல நடவடிக்கைகளை எமது அரசாங்கம் எடுத்துள்ளது.
இருப்பினும், இது ஒரே இரவிலோ அல்லது ஒரு வருடத்திலோ முடித்துவிடக்கூடிய ஒரு விடயமல்ல என்பதை நாம் அறிவோம். ஏனெனில் இது நீண்ட காலமாக வளர்ந்து வந்த ஒரு விடயமாகும். 80களின் முற்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் நடமாடும் சில நகரங்களில்தான் இந்த போதைப்பொருள் வியாபாரம் இருந்தது. அல்லது கத்தி, வாள் போன்றவற்றை கைகளில் ஏந்திக்கொண்டு திரிந்த பாதாள உலகமாகவே இருந்தது. சிறிய துப்பாக்கிகளை வைத்திருந்தார்களே தவிர, அதுவொரு பெரிய திட்டமிடப்பட்ட வலையமைப்பாக இருக்கவில்லை.
ஆனால், நீண்ட கால ஓட்டத்தில் இது இன்று ஒரு பெரிய திட்டமிடப்பட்ட குற்றக் கும்பலாக உருவெடுத்துள்ளது. நாம் 38 ரீ-56 துப்பாக்கிகளை கைப்பற்றினோம், பெருமளவிலான துப்பாக்கிகளைக் கைப்பற்றினோம். துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை கைப்பற்றினோம். துப்பாக்கிகள் தயாரிப்பவர்களைக் கைது செய்தோம். துப்பாக்கிகளைக் கடத்தும் இடங்களைக் கைப்பற்றினோம். வவுனியாவில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுத் தொகுதியைக் கைப்பற்றினோம். கிழக்கில் மிக உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட, ஹெலிகொப்டர் ஒன்றைக் கூட தாக்கக்கூடிய ஆயுதங்களை நாம் கைப்பற்றினோம். இவை அனைத்தும் இவர்களிடம் புழக்கத்தில் இருந்துள்ளன.
இவர்களிடம் இந்த ஆயுதங்கள் இன்று நேற்று வந்தவையா? நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தவர்கள் அல்லது தோட்டா துப்பாக்கிகளை வைத்திருந்தவர்கள், இன்று தன்னிச்சையாக இயங்கும் நவீன துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் அளவிற்கு திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களாக வளர்ந்துள்ளனர்.
அன்று சில கிராமங்களில் ஒன்று அல்லது இரண்டு கிராம் போதைப் பொருள் வைத்திருந்தவர்கள், இன்று 500, 1000 கிலோ என மொத்தமாக விற்பனை செய்யும் நிலைக்கு மாறியுள்ளனர். அன்று தனிநபராக அல்லது இருவராக இருந்தவர்கள், இன்று திட்டமிடப்பட்ட குற்ற வலையமைப்பாக மாறியுள்ளனர். அன்று மிகக் குறைந்த தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தவர்கள், இன்று மிக வலுவான தொழில்நுட்பத்தைக் கையாளும் நிலைக்கு இந்த திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்கள் வந்துள்ளன. மூன்று, நான்கு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில்தான் இது எவ்வித தடைகளுமின்றி வளர்ந்தது.
அரசியல்வாதிகளின் பாதுகாப்பிலும் அவர்களின் ஆதரவின் கீழ் மட்டும்தான் இந்த பாதாள உலகம் வளர்ந்தது. எனவே, இதனை ஒரு வருடத்திலோ அல்லது ஆறு மாதத்திலோ ஒழிக்க முடியும் என்று நாம் கருதவில்லை.
இருப்பினும், இதனை வீழ்ச்சியடையச் செய்வதற்குத் தேவையான நீண்ட கால, நிலையான மற்றும் கடுமையான பல நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம். இந்த திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களையும், அதனுடன் பிணைந்துள்ள அரசியல் வலையமைப்பையும், அதனுடன் பிணைந்துள்ள போதைப்பொருள் வலையமைப்பையும் முழுமையாக இந்த நாட்டிலிருந்து வேரோடு பிடுங்கி எறிவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். வடக்கா, தெற்கா, தமிழரா, முஸ்லிமா, சிங்களவரா என்ற பாகுபாடுமின்றி, இது பரவி வருகின்றது. கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் மீண்டும் இந்த நிலைமை பரவி வருகின்றது. பெருந்தோட்டப் பகுதிகளை இந்த நிலைமை ஆட்கொண்டுள்ளது.
எனவே, நாம் இதனை அழித்தொழிக்க வேண்டுமல்லவா? உங்கள் அரசியல் முகாம்களில் இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர்கள் இருக்கவில்லையா? இருந்தார்கள், இப்பொழுதும் இருக்கிறார்கள். அதனால்தான் இன்று காலையில்கூட சிலர் கைது செய்யப்பட்டார்கள். இப்பொழுதும் இருக்கிறார்கள், எனவே, இந்த ஒழிப்பு நடவடிக்கைக்காக திடஉறுதியுடன் நாம் பணியாற்றி வருகிறோம். இதற்காக இந்நாட்டுப் பொதுமக்களின் ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம்.
நாம் இந்த எந்தவொரு செயல்முறையையும் ஜனநாயகத்தை சீர்குலைத்தோ அல்லது ஜனநாயகத்தை வீழ்த்தியோ செய்ய மாட்டோம். அதனையும் நான் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். நாம் இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய ஒரு அரசியல் இயக்கமாகும். எமது நாட்டு மக்கள் ஒன்று அரசியல்வாதிகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்கள், அல்லது அரசியல்வாதிகளுக்குப் பயந்து வாழ்ந்தார்கள். தொலைபேசியில் பேசுவதற்குக் கூட பயப்படும் ஒரு சூழல் இருந்தது. வீதியில் இறங்கிப் போராடுவதற்குப் பயந்தார்கள், வெள்ளை வேன் வந்துவிடுமோ என்ற அச்ச நிலை இருந்தது. அண்மைக் காலத்தில் நாம் எதிர்கொண்ட நேரடி அனுபவங்கள் இவை. போராட்டம் நடத்துவதற்குப் பயந்தார்கள், கிராமத்தில் இருக்கும் அரசியல்வாதி வந்து தாக்குதல் நடத்துவானோ என்ற பயம் இருந்தது. மக்கள் ஒன்று அடங்கி வாழ வேண்டும், அல்லது பயந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் தான் நாட்டை ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தார்கள்.
இன்று எவரும் ஆட்சியாளருக்குப் பயப்படத் தேவையில்லை. எவரும் ஆட்சியாளருக்கு அடங்கிப் போகத் தேவையில்லை.பிரஜைகளின் சுதந்திரம், ஜனநாயகம், உரிமைகள் குறித்துப் போராடுவதற்கான போராட்டம், ஆட்சியாளரைக் கேள்வி கேட்பதற்கான உரிமை ஆகியவற்றை மிக உயர்வாக ஏற்கும் ஒரு அரசாங்கம் இதுவாகும். ஜனாதிபதி என்ற ரீதியில் மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால், என்னைக் கேள்வி கேட்கும் உரிமை இந்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. எமது அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், மக்களுக்கு அந்த
அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது. தங்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது, அந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடும் உரிமை இருக்கிறது. தங்களைப் பற்றி, தங்களின் துறை சார்ந்த பிரச்சினைகள் எழுந்தால், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துப் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. அதுதான் ஜனநாயகம்.
ஆட்சியாளருக்குப் பயந்து வாழும் ஒரு சமூகமோ ஆட்சியாளருக்கு அடங்கி வாழும் ஒரு சமூகமோ எமக்குத் தேவையில்லை. ஆட்சியாளரை தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தும், ஆட்சியாளர் எப்போதும் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் என்ற பொறுப்புணர்ச்சியுடன் செயல்படும் ஒரு ஆட்சி தான் எமக்குத் தேவை.அதுதான் ஒரு நாகரீகமான அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான உறவின் தன்மையாகும்.
ஆனால் எமது நாட்டில் அரசாங்கத்திற்கும் மக்களுக்குமான உறவின் தன்மை எங்கு இருந்தது? ஒரு முஸ்லிம் நபர் ஒரு கட்டத்தில் பயப்படுகிறார், ஒரு சிங்கள நபர் ஒரு கட்டத்தில் பயப்படுகிறார். ஆட்சியாளருக்குப் பயப்படுகிறார்கள்! ஆட்சியாளருக்குப் பயந்து ஒரு நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆட்சியாளரைக் கேள்வி கேட்க முடியும் என்ற சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படக்கூடிய ஒரு மக்கள் சமூகம் நமக்குத் தேவை. எனவே, நாம் எப்போதும் இந்நாட்டின் ஜனநாயகத்திற்காக இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் விரிவுபடுத்துவதற்காகப் பணியாற்றும் ஒரு அரசியல் இயக்கமாகும்.
1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தற்காலிகமாகவே கொண்டுவரப்பட்டது. ஒரு வருடத்திற்கான தற்காலிகச் சட்டமாகவே பி.டி.ஏ. கொண்டுவரப்பட்டது. ஆனால் 46 வருடங்களாக இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரி ஒரு போராட்டம் இருந்தது. ஜனநாயகத்தை மதிக்கும் மனிதர்கள், அடிப்படை மனித உரிமைகளை மதிக்கும் மனிதர்கள், தங்களின் சுதந்திரம் குறித்துப் பிரார்த்திக்கும் மனிதர்கள்,இந்தக் கடுமையான சட்டம் குறித்து நாட்டில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தனர். நீண்ட காலமாக இந்நாட்டு மக்கள் அந்தச் சட்டத்தை நீக்குமாறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்த வருடத்தில் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படும். நீதி அமைச்சர் சட்டத்தை தயார் செய்துள்ளார். மிக விரைவில் நாம் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவோம்.
இருப்பினும், திட்டமிடப்பட்ட குற்றங்கள் பாரிய அச்சுறுத்தலாக உள்ளன. எனவே, அந்தத் திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்காகத் தேவையான வலுவான சட்டம் ஒன்றை நாம் உருவாக்கி வருகிறோம். பயங்கரவாதத்தை வெவ்வேறான கோணங்களில் அர்த்தப்படுத்தி பி.டி.ஏ. இன் கீழ் வழக்குத் தொடர முடியும். திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு நாம் மிகச் சரியாக வரையறுத்து, ஒரு திட்டமிடப்பட்ட குற்றத்திற்குத் தேவையானவாறு அதன் வரைவிலக்கணத்தை உருவாக்குவோம்.
தம்மோடு உடன்படாதவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டுமானால், அதற்கான ஏற்பாடுகளை பி.டி.ஏ. இன் கீழ் கண்டறிய முடியும். ஆனால் நாம் அதனை மனிதர்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுரிமை, ஜனநாயக உரிமை ஆகியவற்றை முழுமையாகப் பாதுகாக்கும் வகையில் ஒரு திருத்தத்திற்கு உட்படுத்தி மிக விரைவில் அதனை மேற்கொள்வோம்.
திட்டமிடப்பட்ட குற்றங்களை இலக்காகக் கொண்ட வரைவிலக்கணத்திற்கு உட்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர இருக்கிறோம்.
நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது நாம் எதிர்த்தோம். பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு, அடுத்த வாரமே அந்தச் சட்டத்தின் திருத்தங்களை அமைச்சரவையில் சமர்ப்பித்த முதலாவது சட்டம் இதுதான் என்று நான் நினைக்கிறேன் . நாங்கள் அந்த நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளோம். நாம் அதைச் செயல்படுத்த மாட்டோம். அதனை முழுமையாகத் திருத்தி, புதியதொரு சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதற்காகக் கடந்த வாரம் நாம் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றோம். இவைதான் மக்களின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருந்த சட்டங்கள். இப்போது நாம் அதனை ரத்து செய்கிறோம்.
அதுமட்டுமல்ல, பல போராட்டங்கள் நடந்துள்ளன. எங்களது இந்த ஆட்சிக் காலத்திற்குள் மக்களுக்கு எதிராக ஒரு தண்ணீர்ப் பிரயோகம் கூட பயன்படுத்தப்படவில்லை. மக்களுக்கு எதிராக ஒரு கண்ணீர்ப்புகைக் குண்டு கூட பயன்படுத்தப்படவில்லை. மாத்தறை சிறைச்சாலை மோதல் ஏற்பட்டது. சிறைச்சாலையை உடைத்துக் கொண்டு வெளியேற முயற்சி எடுக்கப்பட்டது. அந்தச் சிறைச்சாலைக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்படும் வகையில் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பொதுமக்களின் போராட்டங்களுக்குக் கண்ணீர்ப்புகை பயன்படுத்தாத வரலாறு இது. தண்ணீர்ப் பிரயோகம் பயன்படுத்தாத வரலாறு இது.
மக்களைப் பலப்படுத்தும் ஒரு அரசே நமக்குத் தேவை. நாமும் அதை உருவாக்கவில்லை என்றால், யாரும் உருவாக்க மாட்டார்கள். மக்கள் ஆட்சியாளரைக் கேள்வி கேட்க வேண்டும். தங்களது உரிமைகளுக்காக ஆட்சியாளருக்கு முன்னால் போராடும் உரிமையை வழங்க வேண்டும். உங்களுக்குத் தெரியும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டங்கள் நடக்கின்றன. மக்களுக்குத் தங்களது ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒரு ஆட்சி நமக்கு இட்டுச்செல்லத் தேவை நமக்குள்ளது.
எனவே, ஜனநாயகம், மக்களின் மனித உரிமைகளை மதிக்கும் ஒரு நாடு இது. இந்த பாராளுமன்றத்தில் வரலாற்றில் ஊடகங்களுக்கு எவ்வளவு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன? வரலாற்றில் எத்தனை ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள்? வரலாற்றில் எத்தனை ஊடக நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன? அப்படி எதுவும் இன்று இல்லை. ஆனால், அந்த ஜனநாயகத்தின் உரிமைகளைப் பெறும் குடிமக்களும் தங்களது ஒழுக்கிற்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள்.
நமது சில அரசியல் முகாம்களில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அவர்களுக்கு ஜனநாயக ரீதியாக சுதந்திரமாகச் செயல்பட்டுப் பழக்கமில்லை. எனவே, ஜனநாயக சுதந்திரப் பரப்பில் எவ்வாறு தங்களது கருத்தை முன்வைப்பது, எவ்வாறு தங்களது போராட்டங்களை நடத்துவது என உணர்ந்து செயற்பட வேண்டும். நிதி அமைச்சுக்கு முன்பாகவும் பாராளுமன்றத்திற்கு முன்பாகவும் எத்தனையோ போராட்டங்கள் நடத்தலாம். கல்வி அமைச்சுக்கு முன்னால், நமது செயலகத்திற்கு முன்னால் ஜனநாயக ரீதியில் போராடலாம் . ஆனால் நிதி அமைச்சின் செயலாளரின் வீட்டிற்குச் செல்வது அநாகரிகமானது. ஜனநாயக நாட்டில் சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாத ஒரு மிகச் சிறிய குழுவினர் இருக்கிறார்கள்.
எவ்வாறு ஒரு ஜனநாயக நாட்டில் தங்களது போராட்ட முழக்கங்களின் நாகரிகத்தைப் பாதுகாப்பது? எவ்வாறு ஒரு ஜனநாயக நாட்டில் தங்களது சுதந்திரத்தின் எல்லைகளைத் தங்களுக்குள்ளேயே, தங்களது எல்லைகளை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது? அதுபற்றி எந்தவொரு கருத்தும் அவர்களுக்கு இல்லை. வழக்கமாக இந்தச் செங்கோலை உயர்த்த எதிர்க்கட்சி முயன்றால், அடுத்த பக்கத்தில் என்ன நடக்கும்? ஆளும்கட்சியினர் இறங்குவர். எதிரணி இறங்கி வந்த போதும் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இந்த ஆசனத்திலிருந்து கீழே வரவில்லை.
இந்தச் செங்கோலை உயர்த்திக் கொண்டு ஓடுவது எதிர்க்கட்சியின் வீரச் செயல் என்றும், அதை உயர்த்த விடாமல் பாதுகாப்பது ஆளும்கட்சியின் வீரச் செயல் என்றும் கருதப்பட்டது. அப்படித்தான் வரலாறு இருந்தது. ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை. அதை உயர்த்திக் கொண்டு ஓடுவது அநாகரிகமான செயல், தேவையென்றால் தூக்கிக் கொண்டு செல்லலுங்கள். செங்கோலை தோளில் சுமந்து கொண்டு போவதை மக்கள் ஒரு வீரச் செயலாகப் பார்க்கவில்லை, ஒரு அநாகரிகமான செயலாகவே பார்க்கிறார்கள். வழக்கமாக செங்கோலை தூக்கிக் கொண்டு செல்ல வரும்போது இரு பக்கமும் சண்டை போட்டுக் கொள்வார்கள். இந்த நாட்டுக்கு ஒரு நாகரிகத்தைக் கொண்டு வர வேண்டும் .
எதிர்க்கட்சியில் இரண்டு உறுப்பினர்கள் மட்டும்தான் அமர்ந்திருந்தார்கள். அந்த இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாகரிகத்தின் முன்மாதிரியை யாராவது ஒருவர் தர வேண்டும் அல்லவா!எவ்வளவு வேண்டுமானாலும் பேசுவதற்கு சுதந்திரம் ஜனநாயகம் உள்ளது. எவ்வளவு வேண்டுமானாலும் போராட உரிமை வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக 27/2 கேள்விகளை அந்த எல்லைக்குள் வைத்திருக்க எம்மால் முடியாமல் போயுள்ளது.
இந்த நாட்டை மாற்றியமைப்பதற்குத் தேவையான மிக முக்கியமான விடயத்தைத்தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். நீதிமன்றம் தொடர்பாக ஒரு பெரிய சர்ச்சை அண்மைக் காலத்தில் கிளப்பப்பட்டிருக்கிறது. உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் பிரதம நீதியரசரினால் இன்னும் பெயரிடப்படாதது குறித்து அவரிடம் நான் வினவியிருந்தேன். அவர் மிகவும் நீண்டதொரு விளக்கத்தை அனுப்பியுள்ளார். ஒரு நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி ஓய்வு பெறுவது பற்றி மட்டுமல்ல, முழு நீதிமன்றக் கட்டமைப்பின் இருப்பு குறித்தே நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இன்று பல நீதவான் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன. மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்க நீதிபதிகள் இல்லாமல் இருக்கிறார்கள். கீழ்மட்டத்தில் வெற்றிடங்கள் நிலவுகின்றன. புதிதாக 50 நீதவான்களை நியமிக்க நீதிச் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இப்போது நேர்முகத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன . அதிலிருந்து 33 பேர் தான் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திறமைகள், அந்த ஆளுமை கொண்ட நபர்களை நாம் இந்தத் துறைக்குள் உள்வாங்க வேண்டும்.
கீழ் நீதிமன்றங்கள் வீழ்ச்சியடைய இடமளிக்காமல் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது குறித்து முடிவுகளை எடுக்க வேண்டும் . பிரதம நீதியரசர் மிகவும் தெளிவான விபரமொன்று அனுப்பியுள்ளார். எனவே உயர் நீதிமன்றங்களில் ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை மிகக் குறுகிய காலத்திற்குள் எம்மால் நிரப்ப முடியும்.
சாதகமான தீர்ப்புகளைப் பெறுவதற்காகவே நீதிபதிகளின் நியமனங்களை தாமதிப்பதாக சிலர் கூறியிருந்தார்கள். இதனை விட நீதிபதிகளுக்குச் செய்யும் அவமதிப்பு வேறு எதுவும் இல்லை. நீதிமன்றக் கட்டமைப்பிற்கு அவ்வாறு அவமதிப்புகளைச் செய்யாதீர்கள் . நீதிபதிகள் மிகவும் நீண்ட நேரம் பணியாற்றுகிறார்கள் . அதேபோன்று பெருமளவிலான வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நீதியை வழங்குவதற்காகத் தங்களது உழைப்பைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். எவ்விதத்திலும் ஒரு நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தும் தேவை எமக்கு இல்லை. ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் தேவை எமக்கு இல்லை. போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் தேவையும் எமக்குக் கிடையாது.
ஊடகங்களுக்கு விமர்சனம் செய்யும் உரிமை இருக்கிறது. எம்மிடம் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது, அரசாங்கத்தின் தவறு இருந்தால் அதைச் சுட்டிக்காட்ட உரிமை இருக்கிறது. ஆனால் அதேபோல் தங்களது நாகரிகமான கட்டமைப்பு எது என்பது குறித்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப் போவதில்லை, ஆனால் எப்போதாவது ஒரு நாள் அவர்கள் கற்றுக்கொள்வார்கள் . ஊடகம் பழைய குப்பைக் மேட்டிலேயே இருந்து கொண்டு , சமூகத்தின் முன்பாகச் சென்றால்,அவற்றுக்கு சமூகத்தில் இருக்கும் இருப்பு இல்லாமல் போய்விடும்.
முக்கியமாக ஜனநாயகத்தையும் நிலைநாட்டி, இந்த போதைப்பொருள், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் ஏனைய துறைகள் குறித்தும் நாம் அவதானம் செலுத்தி, இந்த நாட்டை ஒரு நாகரிகமான நாடாகவும், இந்தச் சமூகத்தை ஒரு நாகரிகமான சமூகமாகவும் மாற்றுவதற்காக எடுத்துச் செல்லும் பயணத்திற்காக அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்'' என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
