வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நாளை (01) முதல் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், நேற்று (29) டீசல் விலையைக் குறைத்து அரசாங்கம் பேருந்து உரிமையாளர்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையின்படி, ஜூலை 01ஆம் திகதி முதல் 20 சதவீத பேருந்து கட்டண உயர்வு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது அது 15 அல்லது 17 சதவீதமாகவே இருக்கும் என்றும் கெமுனு விஜேரத்ன கூறினார்.
எவ்வாறாயினும், பேருந்து கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையின்படி போதுமான கட்டண உயர்வு கிடைக்காவிடின், நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக தேசிய கொள்கையிலிருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நேற்று இரவோடு இரவாக டீசல் விலை குறைக்கப்பட்டது. சரியாகச் சொன்னால் இன்று இரவுதான் டீசல் விலை குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.""இந்தக் கட்டண திருத்தம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக நாங்கள் ஒரு கலந்துரையாடலைக் கோரியிருந்தோம். ஆனால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எங்களுக்கு அத்தகைய கலந்துரையாடலை வழங்கவில்லை.அரசாங்கம் அதிக விலைக்கே டீசலை வாங்கியது என்பது எங்களுக்கும் தெரியும். சரியாகப் பார்த்தால் டீசலை 510 ரூபாவிற்கு விற்க வேண்டும். அச்சம் காரணமாகவே அதிக விலைக்கு வாங்கினர்.அந்த நஷ்டம் இன்னும் நீடிக்கிறது. இவ்வாறான பின்னணியில், கட்டண திருத்தம் குறித்த முடிவுகளை எங்களுக்கு அறிவிக்குமாறு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். ஆனால் இவர்கள் ஜூலை 01 முதல் அமுலாகும் பேருந்து கட்டணங்களை அறிவிக்கவில்லை.""அரசாங்கத்திற்கு ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.. கட்டண உயர்வு சதவீதம் அதிகரித்துவிடும் என்று அரசாங்கம் பயந்தது. பேருந்து கட்டணம் அதிகளவில் உயர்ந்துவிடும் என்பதால், இன்று (30) செய்ய வேண்டிய எரிபொருள் விலை சூத்திர திருத்தத்தை நேற்று (29) அவசரமாகச் செய்து, அந்த சதவீதத்தையும் கட்டாயமாகக் குறைத்துவிட்டே பேருந்து கட்டணத்தை அறிவிக்கப் பார்க்கிறார்கள்.""இந்த ஏமாற்று வேலை குறித்து நாங்கள் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளோம். எங்களைத் தவிர்த்துவிட்டு பேருந்து கட்டணத்தை அறிவிக்க அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதன் மூலம் 2.8 சதவீத உயர்வு குறைகிறது.""20 சதவீத பேருந்து கட்டண உயர்வு வந்திருக்க வேண்டும்... அரசாங்கம் வாங்கும் போதும் ஏமாற்றியது, பேருந்து உரிமையாளர்களையும் ஏமாற்றியது.. எல்லா மனிதர்களையும் ஏமாற்றுகிறார்கள்.. எங்களுக்கு குறைந்தபட்சம் 15 சதவீதமாவது உயர்வு வேண்டும்.குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 35 முதல் 40 ரூபாவிற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும். பேருந்துகள் டீசலால் மட்டும் ஓடுவதில்லை. அடித்த பின் கட்டுவதும், கட்டிய பின் அடிப்பதும் ஒன்றுதான் என்பது போலத்தான் அரசாங்கம் செயல்படுகிறது. இந்த அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்காக மக்களுக்கு ஒரு ஏமாற்று வேலையைச் செய்கிறார்கள்.""தாங்கள் செய்வதுதான் சரி என்று அரசாங்கம் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறது.. கொக்கிற்கு ஒரு காலம் வந்தால் மீனுக்கும் ஒரு காலம் வரும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.""பேருந்து கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையின்படி எங்களுக்குப் போதுமான கட்டண உயர்வு வழங்கப்படாவிட்டால், நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தேசிய கொள்கையிலிருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுப்போம்." என்றார்.
