இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விமர்சித்துள்ளது.
இந்த நடவடிக்கை தனியார் பேருந்துத் தொழிலை மேலும் பாதிக்கும் ஒரு "தேசியக் குற்றம்" என்றும் அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
"இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 பேருந்துகளைப் பெறுவதில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால், வெறுமனே பேருந்துகளைச் சேர்ப்பது அரசால் நடத்தப்படும் போக்குவரத்து சேவையின் நிதி மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களைத் தீர்க்குமா?" என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் பேருந்துகள் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துப் பயணிகளின் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், முறையான சாத்தியக்கூறு மதிப்பீடு இல்லாமல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தனியார் உரிமையாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை நாள்தோறும் 20 மில்லியன் ரூபாயை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மேலதிகமாகப் பேருந்துகளைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்து, அரச போக்குவரத்தில் உள்ள செயல்திறன் குறைபாடுகளைச் சரிசெய்யுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரச பேருந்து சேவைகளின் விரிவாக்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்துச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துத் தமது சங்கம் பரிசீலித்து வருவதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
