சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பிரஜையான அனூஜன் என்பவர், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளார் இது தொடர்பில் இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எமது ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் பதில்:
ஊடகவியளாலரின் கேள்வி:
“சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பிரஜையான அனூஜன் என்பவர், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக இன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளதா? குறிப்பாக, அவருக்கு தேவையான தூதரக மற்றும் சட்டரீதியான உதவிகளை வழங்குவதற்கோ அல்லது அவரை மீட்பதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கோ வெளிவிவகார அமைச்சு ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதா?
அதேவேளை, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்லும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் செல்லும் நாடுகளின் சட்டங்கள், சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் முறையான விழிப்புணர்வை வழங்கும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேலும் வலுப்படுத்தும் திட்டம் உள்ளதா?”
அமைச்சரின் பதில்:
"நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்தச் சம்பவம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சிலிருந்து எனக்கு இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்களைப் பெற்றுக்கொள்கிறேன். அதன் பின்னர், அடுத்த வாரம் இதுகுறித்து உங்களுக்குப் பதிலளிக்கிறேன்."
