Our Feeds


Wednesday, July 8, 2026

Zameera

போராட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் உண்மையிலேயே விவசாயிகள்தானா ?? – ஜகத் மனுவர்ண




 (வத்துகாமம் நிருபர்)

அரசாங்கம் என்ற ரீதியில் விவசாயிகளதும் பொது மக்களதும் நலனுக்காக எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம், இந்நிலையில் விவசாயிகளது ஆர்பாட்டங்களில்   பங்குகொள்பவர்கள் அனைவரும்  உண்மையிலேயே விவசாயிகள்தானா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்தார். 

கண்டி, கண்ணொறுவாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 

விவசாயிகளது  ஆர்பாட்டங்களில்  ஈடுபடும் சில நபர்களது முகங்கள்,  ஏனைய ஆர்பாட்டங்களிலும் கண்ட முகங்களாக உள்ளன.  அதாவது தீப்பந்தப் ஆர்பாட்டம், மீனவர் ஆர்பாட்டட்டங்கள் மற்றும் பல்வேறு போராட்டங்களிலும் அடிக்கடி காணப்படுபவர்களாக உள்ளனர்.  இதனால் இந்த விவசாயப் போராட்டங்களில் காணப்படும் அனைவரும் விவசாயிகள்தானா என்ற சந்தேகம் எழுந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அருகில் நடைபெறும் போராட்டங்களில் கூட இந்த நபர்களைக் காண முடிந்தது. அங்கேயே தரையில் அமர்ந்து விலங்குகளைப் போல சோற்றுப் பார்சல்களை உண்ணும் முறையையும் நாம் கண்டோம்.

அதுமட்டுமன்றி, இவர்கள் காலிமுகத்திடல்  இடம் பெற்ற  போராட்டத்திலும்  இருந்தார்கள். எனவே, இவர்கள் விவசாயிகளா, மீனவர்களா அல்லது வேறு யாருமா என்று எம்மால் நினைத்துப்பார்க்க முடியாமல் உள்ளது.

தற்போது நாம் அரசாங்கம் என்ற ரீதியில் நெல்லுக்கு நிலையான விலையொன்றை வழங்கியுள்ளோம். களஞ்சியசாலைகளில் உள்ள நெல் இருப்புகளை அகற்றிவிட்டு, இந்தச் சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

அரசாங்கம் என்ற ரீதியில் விவசாய மக்கள் மற்றும் சாதாரண மக்களின் நலனுக்காக எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம்.

இவ்வாறு பணிகளை முன்னெடுத்துச் செல்லும்போது  சிறிய பிரச்சினைகள் சில எழுகின்றன. அவற்றை நாம் படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.  இரசாயனப் பசளை  பயன்பாட்டை நீக்கியமை போன்ற பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.


இது மக்களின் அரசாங்கம். அதேபோல், இந்நாட்டு விவசாயத்திற்கு வனவிலங்குகளால் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  குரங்குப் பிரச்சினைக்கு எப்படியும் தீர்வுகொண்டு வரப்பட வேண்டும். யார் என்ன கூறினாலும் நாம் அதனைச் செய்வோம்.

இந்த ஆராய்ச்சிகளை நாம் செயல்படுத்துவோம்.  உலகில் எந்தவொரு நாடும் குரங்குப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வைக் கண்டறியவில்லை. நாம் அது குறித்துக் கவனம் செலுத்தியுள்ளோம்.

 பழைய உணவுப் பழக்க, கலாச்சாரத்தை மாற்றிவிட்டு, ஆரோக்கியமான உணவு முறைகளை நோக்கி நகர வேண்டும். இன்று பெருமளவிலான மக்கள் இந்த உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக தொற்றா நோய்களுக்கு உள்ளாகி அவதிப்படுகின்றனர் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »