செயற்கையாகவும், நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் தேவையான புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளுடன் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி மற்றும் ஆனைக்கொய்யா போன்ற பழங்களைச் சட்டவிரோதமான முறையில் நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையைக் கட்டுப்படுத்த தேவையான நுகர்வோர் விவகாரச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு வர்த்தகர்களை வழிநடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பழங்களில் உள்ள இரசாயனங்களின் அளவை விரைவாகப் பரிசோதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குத் தேவையான ஆய்வக வசதிகளை வழங்கி, எதிர்காலச் சோதனைகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகர்கள் தொடர்ந்தும் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால், அடுத்த கட்டமாக அத்தகைய இடங்கள் சோதனையிடப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
