பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ஷஷ உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தின் போது செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று (30) வியாழக்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.இவ்வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் அஸங்க எஸ்.போதரமை முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளிக்கையில்,
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அது தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
கடந்த வருடம் அக்டோபர் 14ஆம் திகதி சட்டமா அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இது தொடர்பில் பான் ஏசியா மற்றும் நேஷன்ஸ் டிரஸ்ட் ஆகிய வங்கிகளிடமிருந்து கணக்கு அறிக்கைகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தினர்.
இதன்போது சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இது சுமார் 11 ஆண்டுகள் பழமையான விசாரணை என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த வங்கி அறிக்கைகளைப் பெறுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என தலைமை நீதிவான், விசாரணை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த விசாரணை அதிகாரி, குறித்த வங்கி அறிக்கைகளை விரைவாகப் பெற்று விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கினை அக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்ட காலத்தில் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 15 மில்லியன் ரூபா பணத்தை என்.ஆர். கன்சல்டன்சி எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம், பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக குற்றம்சாட்டி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்க காலத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நித்யா சமரநாயக்க, சுஜானி போகொல்லாகம மற்றும் சுதர்ஷன பண்டார ஆகிய நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
