“தமிழர்களுக்கு ஆள்வதற்கான உரிமை கொடுக்கப்பட வேண்டும். அதற்கு அதிகாரப் பரவலாக்கல் அவசியம். ஆனால், அதனைக் கொடுக்க யாரும் தயாரில்லையென்பதே இங்குள்ள பிரச்சினை” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கறுப்பு ஜூலை இனக்கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நேற்று (23) இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘‘1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி என்பது இலங்கையின் வரலாற்றில் ஒரு மாறாத வடுவாகவுள்ளது. இந்த இனக்கலவரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அந்த நேரம் எனது வயது 30. 1983 ஜூலை 23இல் திட்டமிட்ட, தமிழர்களை அழிக்கவேண்டுமென்ற நோக்கத்தில் அன்று செயற்பட்ட அரசாங்கம் அதாவது ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம் . ஜே.வி.பியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி அவர்களின் நோக்கம் தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.
கொழும்பு, கண்டி, பதுளை, நுவரெலியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி என தமிழர்கள் வாழும் நகரங்களையும் தமிழர்களையும் அழிக்க திட்டமிட்டே இந்த இனக்கலவரம் நடத்தப்பட்டது. இவ்வாறான ஒரு இனக்கலவரம் மீண்டும் இடம்பெறக்கூடாது. நடந்தவை நடந்தவையாகிவிட்டது. நடப்பவை நல்லவையாகட்டும். அன்று தமிழர்களை அந்தக் கலவரத்தில் அழிக்க வேண்டுமென திட்டம்போட்டிருந்தாலும் பெரும்பாலான சிங்கள மக்கள் தமிழ் மக்களை காப்பாற்றினார்கள்.
தமிழ் மக்களின் பிரச்சினை என்னவென்பது அன்றிலிருந்து இன்றுவரை சகல அரசாங்கங்களுக்கும் தெரியும். பிரச்சினை ஒன்றுதான். அது அதிகாரப்பரவலாக்கல். தமிழர்களுக்கும் ஆள்வதற்கு உரிமை கொடுக்க வேண்டும். தமிழர்கள் நாட்டை ஆள்வதற்கு கேட்கவில்லை. தங்களது மாகாணங்களை தங்களது பிரதேசங்களை ஆள்வதற்காகவாவது தமிழர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும். ஆனால் இது, அன்றுமுதல் இன்று வரை நடைமுறையில் இல்லை. இதுதான் உண்மை.
இதனால்தான் அன்று மாகாணசபைத் தேர்தலை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், அதனை முழுக்க முழுக்க எதிர்த்தது இந்த ஜே.வி.பியினராகிய நீங்கள்தான். அன்று இந்திய எதிர்ப்பை உருவாக்கிய ஜே.வி.பி. இன்று இந்தியாவின் நெருங்கிய நட்பாக இருக்கிறது. இந்த நட்பு தொடரவேண்டும். எனவே நடந்தவற்றை சொல்லிக்காட்டிக்கொண்டிருக்காமல் நாங்கள் என்ன செய்யப்போகின்றோம் என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சொல்ல வேண்டும்.
இதேவேளை, மலையகத்தில் இன்றும் கறுப்பு ஜூலை தான் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இடம்பெறுகின்றன. எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். அதனை செய்யக்கூடிய ஒரேயொரு அரசாங்கமாக இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே உள்ளது’’ என்றார்.
