Our Feeds


Thursday, August 6, 2026

ShortNews

ஹிருணிகாவின் சிறைத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணை செப்டம்பர் 23 வரை ஒத்திவைப்பு!


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்திருந்த மூன்று ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை இரத்து செய்யக் கோரும் மேல்முறையீட்டு மனுவின் விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 23ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது.

2015ஆம் ஆண்டு தெமட்டகொடையில் உள்ள கடையொன்றில் பணியாற்றிய இளைஞர் ஒருவரை கடத்தி, சட்டவிரோதமாக தடுத்து வைத்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், 2024 ஜூன் 28ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் ஹிருணிகா பிரேமச்சந்திரவை குற்றவாளியாகக் கண்டறிந்து, மூன்று ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்திருந்தது.

அந்தத் தீர்ப்பையும் தண்டனையையும் செல்லாததாக்கி இரத்து செய்யுமாறு கோரி ஹிருணிகா மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, நீதியரசர்கள் பி. குமரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேல்முறையீட்டாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ ஆஜராகியிருந்தார். பதிலளிப்பாளர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தார்.

இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவின் மேலதிக விசாரணையை 2026 செப்டம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »