Our Feeds


Wednesday, August 5, 2026

ShortNews

மக்கள் நலனுக்கே முன்னுரிமை கந்தசாமி பிரபு எம்.பி!


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கிராமிய மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மண்முனைபற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாலமுனை மஹ்மூது லெப்பை வீதியை கொங்கிரீட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க தலைமையிலான அமைச்சின் ஊடாக கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பாலங்கள் மற்றும் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதிகளும் நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொது போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில் புதிய மெட்ரோ பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான புதிய பேருந்துகளும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் அரசியல் விளம்பரங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்களுடன் பேருந்துகள் இயக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கம் எந்தவித அரசியல் விளம்பரங்களும் இன்றி, மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் நோக்கில் சுயாதீனமான போக்குவரத்து சேவையை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

புதிய மெட்ரோ பஸ் சேவையில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணிக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணக் கட்டணத்தை செலுத்தும் முறையும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஊழல் மற்றும் இலஞ்சமற்ற நாட்டை உருவாக்கும் நோக்கில் அரச சேவைகளை நவீனமயப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பல புதிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »