கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: தமிழரசு
கட்சியின் வேஷம் கலைந்தது. - ஹக்கீமின் மு.க வும், ரிஷாதின் அஇமக வும் என்ன செய்யும்?கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்தில் முஸ்லிம் பெண்களின் மத, கலாசார ஆடை தொடர்பாக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் தலைவரான முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்ட தரப்பினரை அழைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையிலான தமிழ் எம்.பிக்கள் குழுவினர் சுகாதார அமைச்சரை சந்தித்துள்ளமை இலங்கை தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாடு எவ்வகையானது என்பதை நிரூபித்துள்ளது என கல்முனை இளைஞர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கல்முனை இளைஞர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இதிலிருந்து இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக முஸ்லிம்களின் கலாச்சார உடைக்குத் தான் எதிர்ப்பான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை நிரூபணமாக்கியுள்ளது.
எனவே இந்தக் கட்டத்தில் இந்த துணிப் பிரச்சனையைக் கூடத் தீர்க்க முடியாத அல்லது இதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத இலங்கை தமிழரசு கட்சி அங்கம் வகிக்கின்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் பேசும் கட்சிகளின் பேரவையில் இன்னும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகள் அங்கம் வகிக்க வேண்டுமா? என்பதை ஒருகணம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
அதே நேரம் கல்முனையில் தமிழரசு கட்சியின் ஆதரவு பிரிவான இளைஞர் சேனாவும் களத்தில் இனவாதத்தை கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறது. எனவே இனிமேலும் கிழக்கில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் இதைப் பார்த்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள முடியாது.
முஸ்லிம் சமூகத்தின் மேல் மிளகாய் அரைக்கின்ற வேலையினை இந்த தமிழ் முஸ்லிம் கட்சிகளின் பேரவை கைவிட்டுவிட்டு, ஹிஜாப் உடை விவகாரத்தில் பகிரங்கமாக இலங்கை தமிழரசு கட்சி இவ்வாறு செயற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் சமூகத்தின் இரு முஸ்லிம் கட்சிகளும் பகிரங்கமாக முஸ்லிம் சமூகவிரோத செயலுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழரசு கட்சி அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டமைப்பில் நீடிக்க போகிறீர்களா? இல்லையா? என்பதைச் சமூகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனப் குறிப்பிடப்பட்டுள்ளது.
