தரமான அறிவியலுக்கான அடித்தளம், சமூகத்தின் அனைவருக்கும் எவ்வித பாகுபாடுமின்றி சேவையாற்றுவதற்கான சாத்தியப்பாட்டின் மீதே கட்டியெழுப்பப்படுகின்றது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை Waters Edge ஹோட்டலில் நடைபெற்ற "Pera Engineers' Day Pinnacle 2026" எனும் பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் பொறியியல் சிறப்பு விருது வழங்கல் விழாவில் நேற்று (05) கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொறியியல் துறையில் உயர் பதவிகளை வகிக்கும் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தின் முன்னாள் மாணவர்களான தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர்களைக் கௌரவிக்கும் நோக்கில், அப்பீடத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் (PEFAA) கொழும்புக் கிளையினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது முன்னாள் மாணவர்கள் சிலருக்குப் பொறியியல் சிறப்பு விருதுகளை வழங்கிவைத்த பிரதமர், தொடர்ந்து உரையாற்றுகையில்...
பேராதனைப் பல்கலைக்கழகமானது இலங்கையின் கல்வி வரலாற்றில் தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கல்வி நிறுவனமாகும். நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் முதல் சக்தித் திட்டங்கள், உற்பத்தித் தொழில்கள், தொலைத்தொடர்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பொது உட்கட்டமைப்பு வரையிலான துறைகள் ஊடாக, இன்று நாம் காணும் இலங்கையை வடிவமைப்பதில் பேராதனைப் பொறியியலாளர்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றனர்.
இருப்பினும், பொறியியல் என்பது வெறுமனே கட்டமைப்புகள், இயந்திரங்கள் அல்லது தொழில்நுட்பம் மாத்திரமல்ல. மனிதகுலத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே அதன் மையப் புள்ளியாக இருக்க வேண்டும். மனிதர்களின் வாழ்க்கையை மேலும் எவ்வாறு சிறப்பாக மாற்றுவது என்ற அந்தப் பலமான கேள்வியே ஒவ்வொரு அர்த்தமுள்ள வெற்றியினதும் ஆரம்பமாகும்.
பொறியியலாளர்களாகிய நீங்கள் போக்குவரத்து வலையமைப்பினை மேம்படுத்துவதன் மூலம் சமூகங்களை இணைக்கின்றீர்கள். அதேபோன்று, தூய்மையான நீர், நிலையான சக்தி மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்குப் பங்களிப்புச் செய்வதன் மூலம் சமூகத் தேவைகளுக்கான பல்வேறு தீர்வுகளையும் வழங்குகின்றீர்கள்.
அதன்போது நீங்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் மற்றும் வழங்கும் முன்னுரிமைகளுக்கு அமைவாக, நாம் கட்டியெழுப்பும் சமூகம் மற்றும் நாட்டின் மீது பாரிய செல்வாக்கைச் செலுத்த முடியும்.
அத்தோடு, பொறியியல் துறையின் தொழில்சார் வல்லுநர்களின் அறிவு எல்லையை விரிவாக்குவதற்கும், அறிவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூலங்களை உருவாக்குவதற்கும், அறிவைப் பகிர்தல் போன்ற காரணிகளுக்குத் தேவையான பின்னணியை அமைப்பதற்கும் நமக்கு ஒரு பலமான ஆராய்ச்சிச் செயற்பாடு அவசியமாகின்றது.
குறிப்பாகப் பொறியியல் துறையில் நிலவும் சரியான கொள்கை இன்மை மற்றும் முறையான நிறுவனக் கட்டமைப்பின்மை போன்ற விடயங்களைக் களைவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் நடவடிக்கை எடுத்து வருவதோடு, அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.
அதனாலேயே நாம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) கொள்கையொன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். அதன் மூலம் பொறியியல் துறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, இலங்கைக்குப் பொருத்தமான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை ஒருங்கிணைத்து, ஓர் ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.
அதேபோன்று, ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மாத்திரமல்ல. அரசாங்கங்களால் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க முடியும், ஆனால் அக்கொள்கைகளை உண்மையாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் பணிகளாக மாற்றுபவர்கள் தொழில்சார் வல்லுநர்கள், வர்த்தகர்கள், கல்விமான்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் சாதாரண பிரஜைகளே ஆவர்.
ஆகவே, நேர்மை, திறமை, ஒருவரையொருவர் கைவிடாமை மற்றும் பரஸ்பர மரியாதை என்பவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் நாடொன்றை உருவாக்குவதற்கான பொறுப்பை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அத்தோடு, நமது பல்கலைக்கழகங்கள் புதிய அறிவை உற்பத்தி செய்யும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும், சமூகத்திற்குப் பொறுப்புக்கூறும் மையங்களாக மாற வேண்டும். கல்விச் செயற்பாடுகளுக்கும் நடைமுறைத் தொழில்துறைக்கும் இடையிலான பிணைப்பை மேலும் பலப்படுத்தி, இளம் தொழில்சார் வல்லுநர்கள் தங்களது கருத்துகளைச் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நடைமுறைத் தீர்வுகளாக மாற்றிக்கொள்வதற்குச் சந்தர்ப்பங்களை வழங்கும் இடங்களாகவும் அவை மாற்றம் பெற வேண்டும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பொறியியல் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
