திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) நடைபெற்றுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி, மீன்பிடிப் படகுகளைப் பதிவு செய்தல், மீன்பிடி இறங்குதுறைகளின் பிரச்சினைகள், சிறிய இயந்திரப் படகுகளுக்கான அனுமதி, மீனவர்களின் ஆவண மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறைக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்த்தல், மீனவர்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை அமைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கும் கவனம் செலுத்தப்பட்டது.
மீனவர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு பொறுப்பான நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, தீர்வுகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடுத்தடுத்த மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
