Our Feeds


Saturday, August 1, 2026

Zameera

சானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் இருவருக்கும் மரண தண்டனை நிச்சயம்


 



கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் இருவருக்கும் நிச்சயம் மரண தண்டனை கிடைக்கும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில்  போதுமான வகையில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அந்த தாக்குதலையும், உயிரிழப்புக்களையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று தீர்ப்பளித்து மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.அத்துடன் இருவருக்கும் தண்டப்பணமும் விதித்துள்ளது.


மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இவ்விருவரும் உயர்நீதிமன்றத்தில் நேரடியான மேன்முறையீடு செய்யலாம்.அதற்கான சட்ட இயலுமை காணப்படுகிறது.


பயங்கரவாதி சஹ்ரான் குண்டுத்தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளான் என்று புலனாய்வுத் தகவல் கிடைத்தவுடன் அப்போதைய பொலிஸ்மா அதிபரும்,பாதுகாப்புச் செயலாளரும் ஆச்சரியமடைய வேண்டிய அவசியமில்லை. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சானி அபேசேகர ஆகிய இருவருமே ஆச்சரியமடைய வேண்டும்.


குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் வவுனத்தீவு பொலிஸார் படுகொலை,மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு, மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் குண்டுத்தாக்குதல் ஒத்திகை மற்றும் வனாத்தவில்லு பகுதியில் வெடிப்பொருட்கள் மீட்பு போன்ற சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் இருந்தது.


வனாத்தவில்லு வெடிப்பொருள் மீட்பு மற்றும் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்; சந்தேக நபர்கள் 'சஹ்ரான் பாரதூரமான பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு தயாராகவுள்ளான்' என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு வாக்குமூலமளித்துள்ளார்கள்.


குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் போதுமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தும்  தாக்குதல்களை தடுப்பதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவர்களாக பதவி வகித்த சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவி;ல்லை. ஆகவே பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவரையும் காட்டியும் இவ்விருவரும் பொறுப்பில் இருந்து மிக மோசமாக விலகியுள்ளார்கள். ஆகவே இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கும் இயலுமை நீதிமன்றத்துக்கு உண்டு.



சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுத்த விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் பதவியில் இருந்து சானி அபேசேகரவையும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ரவி செனவிரத்னவையும் உடன் நீக்க வேண்டும். அப்போது தான் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.


(இராஜதுரை ஹஷான்)


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »