கல்முனை வைத்தியசாலையில் வைத்திய உதவியாளர்களின் ஆடை தொடர்பாக உருவான சர்ச்சைக்கு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நியாயமானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வொன்றை வழங்குவதற்குப் பதிலாக, இடமாற்றத்தை தீர்வாக முன்வைத்திருப்பது இன்ர அரசாங்கத்தின் நிர்வாக இயலாமையை தெளிவாகக் காட்டுகிறது.
ஒரு கலாச்சார ஆடை தொடர்பான நிர்வாகப் பிரச்சினை, இன்று ஒரு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறியிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் பிரச்சினையை ஆரம்பத்திலேயே உரிய முறையில் கையாளத் தவறிய அரசின் நிர்வாக அணுகுமுறையே.
அரசாங்கத்தின் பொறுப்பு, ஒரு பிரச்சினை எழுந்தவுடன் அதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பது அல்லது இடமாற்றம் செய்வது அல்ல. மாறாக, உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து, சட்டம், நிர்வாக விதிமுறைகள் மற்றும் ஊழியர்களின் உரிமைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீர்வு காண்பதாகும்.
குறிப்பாக, இங்கே இடமாற்றத்தை ஒரு தீர்வாகப் பயன்படுத்தியிருப்பது மிகவும் பிழையான முன்னுதாரணத்தை உருவாக்க்குவதுடன் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற ஒரு வாய்ப்பாகவும் அமையும்.
நாளை எந்தவொரு அரச நிறுவனத்திலும் ஒரு கொள்கை அல்லது நடைமுறை தொடர்பாக ஊழியர்கள் கேள்வி எழுப்பினால், அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக இடமாற்றம் செய்வது வழக்கமாகிவிட்டால், அது நல்ல நிர்வாகத்தின் அடையாளமாக இருக்காது.
மேலும், இது குறிப்பிட்ட சமூகத்தினரிடையே “எங்களுடைய பிரச்சினைகளை நியாயமாகக் கேட்காமல் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்ற மனநிலையை உருவாக்கக்கூடும். குறிப்பாக இன, மத உணர்வுகள் தொடர்புபடக்கூடிய விடயங்களில் அரசாங்கம் மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் தனது முடிவை மீளாய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்த கலாச்சார ஆடைகளை அணிவதற்கான நியாயமான தீர்வொன்றை வழங்க வேண்டும்.
இது கல்முனை வைத்தியசாலையில் பணிபுரியும் சில ஊழியர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. எதிர்காலத்தில் அரச நிறுவனங்களில் நிர்வாகம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாகவும் இது அமைகிறது.
அதனால், இந்த விவகாரத்தில் பழிவாங்கும் மனப்பான்மையோ, அரசியல் அழுத்தமோ இல்லாமல், நல்லாட்சி, சமத்துவம், நீதி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வே வழங்கப்பட வேண்டும்.
சாதாரண பிரச்சினைக்குக் கூட நியாயமான தீர்வு வழங்க முடியாமல், இடமாற்றத்தைத் தீர்வாகக் காட்டுவது இவ்வாட்சியின் பலத்தை அல்ல நிர்வாகத்தின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
ஹிதாயத் சத்தார் – மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்.
