Our Feeds


Tuesday, September 22, 2026

Zameera

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நல்லூரடியில் போராட்டம்!

 


சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை விடுதலை செய்யக் கோரி இன்று (22) யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.




வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில், அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




இதனையடுத்து, இரு தலைவர்களுக்கும் கோரிக்கை கடிதத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.




நல்லை ஆதீனத்திற்கு முன்பாக ஆரம்பமான போராட்டம் பேரணியாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் நோக்கி முன்னெடுக்கப்பட்டது. இந்திய பிரதமருக்கான கோரிக்கை கடிதம் இந்திய துணைத் தூதரகத்தில் கையளிக்கப்படவுள்ளது.




வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் தலைவர் தரணீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தேசிய மகா சபையினர், முஸ்லிம் சமூகத்தினர், கிழக்கு மாகாண ஐயப்ப சுவாமி அமைப்பினர் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.




(பு.கஜிந்தன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »