Our Feeds


Friday, September 25, 2026

Zameera

காலாவதியான மருந்து விசிறப்பட்ட வாழைக்குலைகள் ஆலய அன்னதானத்துக்கு விற்க முயற்சி ; சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

 


காலாவதியான மருந்து விசிறப்பட்ட வாழைக்குலைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயத்தின் அன்னதானத்துக்காக விற்பனை செய்ய முயன்றவருக்கு 6 மாத சிறைத்தண்டனையுடன், 5 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. 


வடமராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், குறித்த ஆலய அன்னதான மடத்தினருக்கு விற்பனை செய்யவென ஒரு வருட காலத்துக்கு முன்னர் காலாவதியான மருந்து விசிறப்பட்ட 424 கிலோ  வாழைக்குலைகளை கோப்பாய் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கைப்பற்றியிருந்தனர்.


மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நிலையில் வாழைக்குலைகள் காணப்பட்டமையால், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவை முற்றாக அழிக்கப்பட்டன. 


அந்நிலையில் குறித்த வாழைக்குலைகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நீர்வேலி வடக்குப் பகுதியைச் சேர்ந்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவ்வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 



அதன்போது, தன் மீதான குற்றச்சாட்டை வாழைக்குலை விற்பனையாளர் ஏற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் நீதிமன்றம் விதித்துள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »