இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு,
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பிள்ளைகளை உடலியல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளவியல் ரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைப் பேறுகளைக் காரணியாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பதையோ அல்லது அவர்களை உளவியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவதையோ தவிர்க்குமாறு பெற்றோரையும் பாதுகாப்பாளர்களையும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், பிள்ளைகளுக்கு அசௌகரியம், மன உளைச்சல் அல்லது அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான செய்திகளையோ அல்லது உள்ளடக்கங்களையோ வெளியிட வேண்டாம் என ஊடக நிறுவனங்களுக்கும் சமூக வலைத்தளப் பயனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்கள் சிறுவர் துஷ்பிரயோக குற்றங்களாகக் கருதப்படலாம் என்றும், இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சாத்தியமான அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.
