(க.சிவலிங்கமூர்த்தி)
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாண்டு கால ஆட்சியானது, வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸின் ஆட்சியை விடவும் நாட்டின் இறையாண்மையை அடகு வைத்த மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் பணிமனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு இந்த மாதம் 23ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
அந்த இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு மக்களுக்குச் சொல்வதற்குப் புதிதாக எவ்வித சாதனைகளோ அல்லது திட்டங்களோ இல்லாததால், ஏதோவொரு கதையைக் கூறி; மக்களை ஏமாற்றுவதற்கு ஜனாதிபதி நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளார்.
வரிக்கு மேல் வரிகளைச் சுமந்து கொண்டு தப்பிக்க வழியின்றி ஆதரவற்ற நிலையில் இருக்கும் இந்த நாட்டு மக்களுக்கும், வாழ்க்கைச் சுமையால் பேரழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும், விவசாயிகளுக்கும் இன்று அநுர குமார ஜனாதிபதியின் போலித்தனமான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
இந்த ஜனாதிபதியின் இரண்டாண்டு ஆட்சிக் காலம் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸின் ஆட்சிக்கே சரியாகப் பொருந்துகிறது. வெனிசுலாவில் ஹியூகோ சாவேஸின் மறைவுக்குப் பின் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சி அமைந்தது.
2026 ஜனவரியில் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க சிறப்புப் படையினர் சர்வதேச சட்டங்களை மீறி கடத்திச் சென்ற பிறகே இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸின் ஆட்சி தொடங்கியது.
இங்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராகச் சோமவன்ச அமரசிங்க இருந்த போதே அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, அனைத்து அதிகாரங்களையும் அநுர குமார தம் கைவசம் எடுத்துக்கொண்டார்.
அவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலம், வெனிசுலாவில் மதுரோவைக் கடத்திச் சென்ற பின் டெல்சி ரொட்ரிகஸின் ஆட்சியை நிறுவி, அமெரிக்கா தன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டது போல் இங்கும் நடந்துள்ளது.
வெனிசுலாவில் கச்சா எண்ணெய் இருப்பின் பெரும் பகுதியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது போல், இங்கும் இந்திய ஏகாதிபதியத்துக்கு எதிராகப் போராடிய மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீரவின் படத்தையும், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகிய தலைவர்களின் படங்களையும் முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த அநுர குமார, இந்தியாவுடன் ஏழு இரகசிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் அடகு வைத்துள்ளார்.
வெளிநாடு ஒன்றோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களை மக்களுக்குக் காட்டாமல் மறைத்த முதல் ஆட்சி அநுர குமாரவின் ஆட்சியாகும். அத்துடன், இதுவரை இருந்த எந்தவொரு ஆட்சியாளரும் செய்யாத வகையில் இந்நாட்டின் மருந்துச் சந்தையை இந்தியத் தரமற்ற மருந்துகளின் தரத்துக்குக் கீழிறக்கி மக்களின் உயிரோடு விளையாடுகின்றார்.
சாவேஸின் படங்களை வைத்துக்கொண்டு டெல்சி அமெரிக்காவுக்கு எண்ணெய் வளத்தைக் காட்டிக்கொடுத்தது போல், விஜேவீரவின் படத்தை வைத்துக்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார இந்தியத் தேவைகளுக்காக அனைத்தையும் காட்டிக்கொடுத்துள்ளார்.
ஆதரவாளர்களின் எதிர்ப்பு அலையைச் செயலிழக்கச் செய்து, இடதுசாரி அடையாளத்தைப் பயன்படுத்தி நாட்டை வெளிநாடுகளுக்குத் தாரை வார்ப்பதே இவர்களின் உண்மையான திட்டமாகும் என விமல் வீரவன்ச மேலும் சுட்டிக்காட்டினார்.
