Our Feeds


Saturday, September 19, 2026

Zameera

அனோஜனை மன்னியுங்கள் ! அதுதான் நபியின் இஸ்லாம் !

 


அனோஜனை மன்னியுங்கள் !

அதுதான் நபியின் இஸ்லாம் !


கலீலுர் ரஹ்மான்

பொதுச் செயலாளர்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு


சமூக வலைதளத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக அவதூறான கருத்தை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் சகோதரர் அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி, இலங்கையர்கள் என்ற வகையில் எம் அனைவரது உள்ளங்களையும் உலுக்கும் செய்தியாகும். இது போன்ற தருணத்தில் எமக்கு முதலில் நினைவுக்கு வருவது திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக் சகோதரிதான். வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற அவர், குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் குழந்தை உயிரிழந்ததை காரணம் காட்டி சவூதி அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டார். அன்று முழு நாடும் ஜாதி மத பேதமின்றி அவரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தும், இறுதியில் நீதி கிடைக்கவில்லை. இன்று அனோஜனுக்கும் அதே கதி ஏற்பட அனுமதிக்கலாமா என்பதே நாம் அனைவரும் நம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.


சவூதி அரேபியாவில் அமுலில் உள்ள பல சட்டங்கள் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் என்று கூறப்பட்டாலும், உண்மையில் அவை முடியாட்சியின் கடுமையான சட்டங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் உண்மையான சாராம்சம் தண்டனை அல்ல, கருணை, மன்னிப்பு மற்றும் இரக்கமே ஆகும். நபிகள் நாயகத்தின் முழு வாழ்க்கையும் அதற்கு சாட்சியாகும். தம்மை அவமதித்தவர்கள், கல்லெறிந்தவர்கள், துன்புறுத்தியவர்களைக் கூட அவர்கள் மன்னித்ததாக வரலாறு கூறுகிறது. மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், பல ஆண்டுகளாக தமக்கு எதிராக போரிட்ட எதிரிகளைப் பார்த்து கூட "இன்று உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை, நீங்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள்" என்று கூறி அவர்களை மன்னித்தார்கள். எனவே இன்று நபிகள் நாயகம் உயிருடன் இருந்திருந்தால், அறியாமையாலோ அல்லது கோபத்தாலோ தவறு செய்த இந்த தனி தமிழ் சகோதரரை நிச்சயமாக மன்னித்திருப்பார்கள். அது உறுதி. அதுதான் நபியின் உண்மையான இஸ்லாம்.


தன்னை இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் சவூதி அரசு இன்று உலக புவிசார் அரசியலில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. மேற்கத்திய சக்திகளால் நபிகள் நாயகத்திற்கும் இஸ்லாத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த அவதூறுகளுக்கு எதிராக மௌனமாக இருந்து கொண்டு, தனி ஒரு அப்பாவி இலங்கையருக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் இஸ்லாத்தின் பிம்பம் பாதுகாக்கப்படாது. அதற்கு பாதிப்புதான் ஏற்படும். எனவே இலங்கை முஸ்லிம்களாகிய எமது ஏகோபித்த கோரிக்கை என்னவென்றால், சவூதி அரசு இந்த விவகாரத்தை கருணையுடன் பார்த்து, இஸ்லாத்தின் உண்மையான மன்னிக்கும் பண்பைக் காட்டி, அனோஜன் சகோதரருக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்பதே. ரிசானாவுக்கு மறுக்கப்பட்ட நீதி, அனோஜனுக்கு மறுக்கப்படக்கூடாது. இதற்காக இலங்கை அரசும் வெளிவிவகார அமைச்சும் உடனடியாக தலையிட வேண்டும்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »