Our Feeds


Saturday, September 26, 2026

Zameera

தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் : மேலும் இருவர் கைது


 தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தி இரண்டு சிறுவர்களைக் கொலை செய்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.


11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இக் கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை பலத்த காயமடைந்தார்.


இக் குற்றச்செயல் தொடர்பில் மேல் மாகாண தெற்கு திசை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.


இவ்விசாரணைகளின் கீழ், தாக்குதலை நடத்திய முதன்மைச் சந்தேகநபர் உட்பட இருவர் 17 ஆம் திகதி ரிதீமாலியத்த, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் வைத்துக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இக் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மேலதிக சந்தேகநபர்கள் இருவர் தெஹிவளை பொலிஸ் பிரிவில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 11 கிராம் 960 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்டவர்கள் பிளியந்தலை மற்றும் கஹதுடுவ பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் ஆவார்.


மேலும், இச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு திசை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »