சவுதி அரேபியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக,
அப்பகுதிக்கு விமானப் போக்குவரத்துகளில் தடை ஏற்படக்கூடும் என எச்சரித்து, ஜித்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உம்ரா செல்லத் திட்டமிட்டுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.செவ்வாய்க்கிழமை (13) வெளியிடப்பட்ட அறிவிப்பில், உத்தேசிக்கப்பட்டுள்ள புனித யாத்திரிகர்கள் தங்களது பயண ஏற்பாடுகளைச் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
உம்ரா பயணம் மேற்கொள்ள விரும்பும் இலங்கையர்கள், தங்களது பயணத் திட்டங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக, சம்பந்தப்பட்ட உம்ரா குழு பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் (Travel Agents) தொடர்ந்து நெருக்கமான தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பயணத்தின் போது அவசரநிலைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தகுந்த அவசரகால மாற்று ஏற்பாடுகளைச் செய்வதன் அவசியத்தையும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவுக்கான விமானப் போக்குவரத்தைப் பாதிக்கக்கூடிய பிராந்தியப் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதைடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீதான கொடூக தாக்குதல்களும் இதில் அடங்கும். இதன் காரணமாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அக்டோபர் 17 வரை விமான நிலையத்தின் செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புக் கவலைகளைக் கருத்திற்கொண்டு, ரியாத்துக்கான தனது விமானச் சேவைகளையும், கொழும்புக்கும் தம்மாமுக்கும் இடையிலான சேவைகளையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம் அக்டோபர் 18 வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
