ருவான்வெலிசாய முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு நாளை (13) வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று (11) காலை 10 மணிக்கு கொழும்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைப் பிரிவு 02 இல் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
உடமலுவ பொலிஸ் நிலையத்தின் ஊடாக தேரருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வாக்குமூலம் வழங்குவதற்கு வருகை தர முடியாது என்றோ அல்லது வருகை தரப்போவதில்லை என்றோ தேரர் தரப்பில் எந்தவொரு அறிவித்தலும் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து, நாளை (13) கொழும்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி குறித்த வாக்குமூலத்தை வழங்குமாறு உடமலுவ பொலிஸார் மீண்டும் அறிவித்தல் விடுத்துள்ளனர்
எவ்வாறாயினும், இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர், தாம் எந்தவொரு நீதிமன்ற உத்தரவையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எந்தவொரு நீதிமன்ற உத்தரவையும் தம்மிடம் கையளிக்க முடியாது எனவும், தமக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் சங்க நீதிமன்றத்திற்கே உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
