Our Feeds


Wednesday, November 18, 2026

Zameera

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள் மீண்டும் சேவையில் இணைய இணக்கம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ


 (எம்,ஆர்,எம்,வசீம், இராஜதுரை ஹஷான்)



2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள் மீண்டும்  நாட்டுக்கு வருகைத் தரவும், சேவையில் இணையவும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். பத்திரிகையில் விளம்பரம் பிரசுரித்து வைத்திய சேவைக்கு ஆட்களை இணைக்க முடியாது. முறையான வழிமுறைகள் மற்றும் பயிற்சிக்கு அமைவே வைத்திய சேவைக்கு நியமனங்களை வழங்க முடியும் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  (17) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு  இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,


நாட்டில் சுகாதார சேவையில் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து  சுகாதார சேவையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.  அதன் தாக்கம் இன்றுவரை செல்வாக்குச் செலுத்துகிறது.



சுகாதார கட்டமைப்பில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நாட்டில்  மத்திய அரசின் கீழ் 70 வைத்தியசாலைகளும், மாகாண சபைகளின் கீழ் 1140 வைத்தியசாலைகளும் இயங்குகின்றன.


2017 ஆம் ஆண்டு ஆளணி அனுமதிப்படுத்தல் தரப்படுத்தலுக்கமைய  விசேட வைத்தியர் சேவையில் 2903 பேர் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 2767 பேர் மாத்திரமே சேவையில் உள்ளார்கள். வைத்திய சேவையில் 23,353 பேர் இருக்க வேண்டிய நிலையில்   21670 பேர் மாத்திரமே சேவையில் உள்ளார்கள்.


தாதியர் சேவையில் 47997 பேர் சேவையில் இருக்க வேண்டிய நிலையிpல் 45 378 பேர் சேவையில் உள்ளார்கள். அதேபோல் இரசாயன நிபுணர் சேவையில்  355 பேருக்கான வெற்றிடம் காணப்படுகிறது. 2017 ஆம் ஆண்டுக்கான ஆளணி அனுமதி தரப்படுத்தலை திருத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


பொருளாதார பாதிப்பை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகைத் தருவதற்கும், சேவையில் இணைவதற்கும் இணக்கம்  தெரிவித்துள்ளார்கள். அரச சேவை ஆணைக்குழுவுக்கு இதுகுறித்து அறிவித்துள்ளோம்.ஆணைக்குழுவின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.


எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுவதை போன்று வைத்திய சேவைக்கு உடனடியாக புதியவர்களை இணைத்துக் கொள்ள முடியாது.  பத்திரிகையில் விளம்பரம் செய்து விண்ணப்பங்களை பெற்று, ஏதாவதொரு மரத்தின் கீழ் இருந்தவாறு நேர்முகப்பரீட்சையை நடத்தி நியமனங்களை வழங்க முடியாது.


முறையான வழிமுறைகள் மற்றும் பயிற்சிக்கு அமைவாகவே வைத்திய சேவைக்கு நியமனங்களை வழங்க  முடியும்.  எதிர்வரும் ஆண்டு வைத்திய சேவைக்கு புதிதாக 7000 பேரை இணைத்துக்  கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவையில் நிலவும்  நெருக்கடிக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »