(செ.கவிஷனா)
விவசாய நடவடிக்கைகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு, இதுவரை எவ்வித பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான விவசாயக் காணிகளை மீண்டும் அரசாங்கத்தின் பொறுப்பில் எடுத்து, அவற்றை பயனுள்ள விவசாயத் திட்டங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காணி விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.பயண வழிகாட்டி
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு பயிர்ச்செய்கைத் திட்டங்கள் மற்றும் முதலீடுகளுக்காக தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தின் விவசாயக் காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், அவற்றில் சில காணிகள் முறையாகப் பயிரிடப்படாமல் வீணாகக் கைவிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட குத்தகை ஒப்பந்தங்களின் நிபந்தனைகள் மற்றும் நடைமுறையிலுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாக அவ்வாறான காணிகளை அடையாளம் கண்டு மீண்டும் அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறு மீளக் கையகப்படுத்தப்படும் காணிகள், பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு உண்மையான ஆளுமையும் திறனும் கொண்ட தரப்பினருக்கு பயனுள்ள விவசாயத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
தமக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் இதுவரை எவ்வித பயிர்ச்செய்கையையும் மேற்கொள்ளாத 135 குத்தகைதாரர்கள் அதிகாரிகளால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த காணிகளை மீண்டும் கையகப்படுத்தி ஆக்கபூர்வமான விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு விவசாய உற்பத்தியை அதிகரித்தல், புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் கிராமப்புற மக்களுக்கு மேலதிக வருமான வழிகளை உருவாக்குதல் ஆகியவையே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
