மலையகப் பெருந்தோட்ட மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் ஆணைக்குழுவொன்றை உருவாக்கி, அவர்களும் இந்த நாட்டின் ஏனைய சமூகத்தைப் போன்று சம அந்தஸ்து, உரிமையுள்ள பிரஜைகள் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின்கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிப்பு மற்றும் 2026ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மலையகத் தோட்டப்பகுதிகளில் தரிசாகக் காணப்படும் நிலங்களை அங்குள்ள இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த வேலைத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி பழங்கள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஏற்றுமதிப்பொருட்களை அங்கு உற்பத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க முடியும்.
அந்த காணிகளை வெளியாருக்கு வழங்கப் போவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி மலையகப் பெருந்தோட்ட இளைஞர்களுக்கு அந்த காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ள நிலையில், மலையக மக்களுக்கு வங்கிகளில் கடன்களை பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு காணி உரிமைப் பத்திரம் இல்லாத நிலையில் வங்கிகள் அவர்களுக்கு கடன் வழங்க மறுக்கின்றன.
அந்த மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து, அவர்களுக்கு கடனை வழங்குவதற்கான அறிவுறுத்தலை அரசாங்கம் வங்கிகளுக்கு வழங்க வேண்டும். மலையக சமூகம் பிற்பட்ட சமூகம் என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டே அதுதான் அவர்களது நிலை. தீவுகள் ஆராயுங்கள்
தேயிலை மூலம் நாட்டுக்கு பெருமளவு வருமானம் கிடைக்கின்ற போதும் அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாத நிலையிலேயே காணப்படுகின்றன. குறைந்த வருமானமே அவர்களுக்கு கிடைப்பதால் தற்போது தோட்டங்களில் தொழில் புரியும் மக்களின் எண்ணிக்கை 98,000 ஆக குறைந்துள்ளது. சரியான ஊதியத்துடன் தொழில் செய்ய முடியாத காரணத்தால் இளைஞர்கள் நகர்ப்புறங்களுக்கு செல்கின்றனர்.
நாட்டில் மிக மோசமான வறுமை நிலையில் உள்ள மக்கள் மலையக மக்களே. 36 சதவீதமானவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். சுகாதார ரீதியிலும் அவர்கள் மிகவும் நலிந்த நிலையில் காணப்படுகின்றனர்.
அதனால் மலையகப் பெருந்தோட்ட மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் ஆணைக்குழுவொன்றை உருவாக்கி அந்த மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் என அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் அதன் மூலம் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களும் இந்த நாட்டின் ஏனைய சமூகத்தைப் போன்று சம அந்தஸ்து, உரிமையுள்ள பிரஜைகளாக உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் இந்த நாட்டில் இரண்டாம் பிரஜைகள் அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த ஆணைக்குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது அந்த மக்களுக்கான 10 வருட வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் தோட்டப்பகுதிகளில் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். அதற்காக நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் பசு வளர்ப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு அது ஒரு பிரத்தியேக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் என்றார்.
