Our Feeds


Thursday, November 5, 2026

Zameera

அரசாங்கத்தில் எவருக்கும் குற்றவியல் கும்பல்களுடன் எவ்விதத் தொடர்பும் கிடையாது - கௌஷல்யா ஆரியரத்ன

 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)



தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதுடன் தற்போதைய அரசாங்கத்தில் எவருக்கும் குற்றவியல் கும்பல்களுடன் எவ்விதத் தொடர்பும் கிடையாது என ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின்கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிப்பு மற்றும் 2026ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


எரிபொருள் மானியங்களை வழங்குவதற்கும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறும் குடும்பங்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கும் 47 பில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


முழு உலகமும் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில் அவ்வாறு எதுவும் நடைபெறாதது போன்றே எதிர்க்கட்சியினர் செயற்படுகின்றனர். நாட்டில் எரிபொருள் விலையேற்றம், பொருட்களின் விலைகளில் அதிகரிப்பை ஏற்படுத்துவதுடன், நாட்டின் நடைமுறை கணக்கிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.


இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் எரிபொருள் மானியத்துக்காக 4.9 பில்லியன் அமெரிக்கன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 2025ஆம் ஆண்டில் இதற்காக 2.96 பில்லியன் அமெரிக்கன் டொலர்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தன.


ஏனெனில் உலகில் ஏற்படும் சில மாற்றங்களை முன்கூட்டியே கணிக்க முடியாது. எனினும், இவ்வாறான சவால்களை அரசாங்கம் முறையாக முகாமைத்துவம் செய்து வருகின்றது. 


எரிபொருளை இறக்குமதிச் செலவுக்கு இணையான விலையில் விற்பனை செய்ய முடியாது எனக் கூறப்பட்டாலும், அதனைவிடக் குறைந்த விலையிலேயே பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது. அரசாங்கம் குறைந்த விலையிலேயே மக்களுக்கு எரிபொருளை விநியோகிக்கின்றது. நாட்டில் பல்வேறு சவால்கள் காணப்பட்டாலும், அதன் சுமையை மக்கள்மீது சுமத்தாமல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.


எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வெளிப்புற இடர்பாடுகளுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது.



இந்த ஆண்டின் மத்திய பகுதியில் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அத்துறை திருப்திகரமான நிலையை எட்டியுள்ளது. வெளிநாட்டு பணவனுப்பல்களும் அதிகரித்துள்ளன.


அத்துடன் அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. மாறாக, பயனாளர் பட்டியலில் மேலும் 7 இலட்சத்து 40 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இக்குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றனர்.


அரசியல், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான தொடர்புகளை அரசாங்கம் முற்றாகத் துண்டித்து வருகின்றது. இத்துறைகளில் அரசியல் தலையீடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் எவரும் குற்றவியல் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல.


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளைத் திறம்பட ஒடுக்குவதற்குத் தேவையான சட்டங்களை இயற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் இந்த முன்னேற்றங்களை நம்பிக்கையுடனும் நேர்மறையான கண்ணோட்டத்துடனும் நோக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »