Our Feeds


Wednesday, October 7, 2026

ShortNews

BREAKING: பயங்கரவாதி ஸஹ்ரானுடன் இணைந்து ஆயுதம் சேமித்த 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.

 


2018 ஆம் ஆண்டு வண்ணாத்திவில்லு, லாக்டோஸ் தோட்டத்தில் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தீவிரவாதிகளுடன் இணைந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைச் சேமித்து வைத்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட இருவருக்கு, கொழும்பு மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

SHAHNI RAMEES

ஷிரந்தி ராஜபக்‌ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

 


முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள்

Tuesday, October 6, 2026

ShortNews

நாகொட வைத்தியசாலையில் ஹிஜாப் அணிந்து பணியாற்றிய பெண் ஊழியருக்கு இடையூறு !



கடந்த 10 வருடங்களாக சீறுடைக்கு மேலதிகமாக ஹிஜாப் மற்றும் காட்சட்டை அணிந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றி அண்மையில் நாகொட வைத்தியசாலைக்கு இடம்மாற்றம் பெற்று வந்த பாதிமா ரிப்தியா என்ற பெண் மருத்துவ உதவியாளருக்கு ஹிஜாப் அணிந்து பணியாற்ற இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


நாகொட வைத்தியசாலை இயக்குனர் குறித்த முஸ்லிம் பெண் ஊழியருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து சுகாதார அமைச்சில் முறையிட்டுள்ளார். 


அங்கு அவருக்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் குறித்த பெண் ஊழியரை கல்லஸ்ஸ வைத்தியசாலைக்கு இடம்மாற்றம் செய்ய  நாகொட வைத்தியசாலை இயக்குனர் தீர்மானித்துள்ளார்.

குறித்த இடமாற்றதை முஸ்லிம்  பெண் ஊழியர்  ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதால்  அவரை  அதே வைத்தியசாலையில் சத்திர சிகிற்சை பிரிவில் (தண்டனை) பணியமர்தப்பட்டுள்ளார்.


இது தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த பெண் ஊழியர் “ தான் ஹிஜாப் அணிந்து வைத்தியசாலை வளாகத்தில் பணியாற்றக்கூடாது என்பதன் காரணமாகவே தான் மூடிய அறைக்கு தன்னை மற்றியுள்ளதாக பகிரங்க குற்றம் சுமத்தினார்.


ஏற்கனவே உடல் உபாதை அசௌகரியங்களால் அவதியுறும் குறித்த பெண்மணி சத்திரசிகிற்சைப்பிரில் பணியாற்றுவதில் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ShortNews

Breaking: மருத்துவமனையிலிருந்து மீண்டும் CID பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டார் சுரேஷ் சலே


 


119 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.



ShortNews

ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரை பரிந்துரைத்த மசூத் பெசெஷ்கியன்!



ஈரானின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கான வேட்பாளராக, நாட்டின் ஏவுகணைத் திட்டங்களில் நீண்ட அனுபவம் கொண்ட மெஹ்தத் அக்லாகி கெதாபாச்சியை (Mehrdad Akhlaghi Ketabachi) ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பரிந்துரைத்துள்ளார்.



போரின் தொடக்கத்தில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அஜீத் நசிர்காதே கொல்லப்பட்டார்.இதனால் மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து அந்தப் பதவி தற்காலிக அமைச்சரைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.



ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஷாஹித் பகெரி தொழில்துறை குழுவின் (Shahid Bagheri Industrial Group) தலைவராகப் பணியாற்றியதற்காக அக்லாகி கெதாபாச்சி மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. 



மேலும், அவரது கடந்தகாலப் பாதுகாப்புப் பணிகளின் காரணமாக அவர் அமெரிக்கத் தடைகளையும் எதிர்கொண்டுள்ளார். அக்லாகி கெதாபாச்சியின் இந்தப் பரிந்துரைக்கு பாராளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பு தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ShortNews

இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு ரூ.1.6 பில்லியன் ஒதுக்கியது அரசாங்கம்.



 2027ம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ள பாடநூல்கள் மற்றும் கற்றல் தொகுதிகளை (Modules) அச்சிடுவதற்கான முதற்கட்டக் கொள்முதல் நடவடிக்கைக்காக (Phase 1) அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 1, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கற்றல் தொகுதிகள் உட்பட 421 வகையான பாடநூல்கள் மற்றும் கற்றல் தொகுதிகள் அச்சிடப்படவுள்ளன. 

இதற்காக தேசியப் போட்டித்தன்மை வாய்ந்த கொள்முதல் நடைமுறையின் கீழ் விலை மனுக்கள் கோரப்பட்டிருந்த நிலையில், 31 வில​ை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 

விலை மனு மதிப்பீடுகளின் பின்னர், உயர்மட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பேரில், குறித்த அச்சிடல் பணிகளை 21 அச்சகங்களிடம் 1,614.69 மில்லியன் ரூபாய் தொகையில் ஒப்படைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த தொகையில் பெறுமதி சேர் வரி (VAT) உள்ளடங்கவில்லை என அமைச்சரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

ShortNews

ஞானசார தேரருக்கு மட்டுமல்ல 63 பேருக்கும் இதே நிலை!



 கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி, அவருக்கு சாதாரண உடை அணிவிக்கப்பட்டமையானது சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்துக்கு அமைவாகவே இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

இன்று (6) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது 63 பௌத்த தேரர்கள் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்களுக்கும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

"சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் படி செயற்பட வேண்டிய நடைமுறை ஒன்று உள்ளது. இந்தச் சம்பவத்தில் எந்தவொரு சிறப்பு விதிவிலக்கும் செய்யப்படவில்லை. 

இதேவேளை, இன்று நீதிமன்றத்திற்கு ஞானசார தேரர் சாதாரண உடையில் அழைத்து வரப்பட்டமை சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கோட்டே சங்க சபை, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. 

பௌத்த ஒழுக்க நெறியின் பிரகாரம், ஞானசார தேரர் பாரதூரமான, மன்னிக்க முடியாத பெரும் குற்றங்களை புரிந்த பௌத்த துறவி என்றோ அல்லது அவரது காவி உடையைக் களையும் அளவுக்குப் பாரதூரமான காரணம் எதுவும் பதிவாகியிருக்கவில்லை எனத் தமது சங்க சபைக்குத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சாசன ரீதியாக அந்தத் தேரர் தொடர்பில் ஒழுக்கவியல் விசாரணையை நடத்தி, அவரது துறவற ஆடையைக் களைவதா அல்லது தொடர்ந்து ஆடையை அணிய அனுமதிப்பதா என்பது தமது சங்க சபைக்குரிய பொறுப்பாகும் என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனவே, அவரது காவி உடையை அகற்றாது, தொடர்ந்து காவி ஆடையை அணிவதற்கு அவருக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு கோட்டே சங்க சபையின் முதன்மைப் பதிவாளர், கொடபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ShortNews

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!

 


முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மாத்தறை ‘பிரவுன்ஸ் ஹில்’ காணி முடக்கப்பட்டுள்ளதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

 


குறித்த காணி கையகப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகளின்போது உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ShortNews

சுரேஷ் சலே வைத்தியசாலையிலிருந்து விடுவிப்பு - மீண்டும் CID பொறுப்பில்

 


அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளை நிறைவு செய்து வெளியேற முடியும் என 10 வைத்தியர்கள் அடங்கிய குழாம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


இதனடிப்படையில், சுரேஷ் சலே இன்று (06) மாலை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் எடுக்கப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், சுரேஷ் சலே மீதான வழக்கின் விசாரணை முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 21ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ShortNews

தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் குறைத்துள்ளமையால் சில பிரதேசங்களில் தற்காலிக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் - CEYPETCO



இந்த மாதத்தின் இறுதி வரை எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையிலேயே பேண முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். 

இன்று (6) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

எதிர்பார்க்காத பெரிய பிரச்சினைகள் ஏதும் ஏற்படாவிட்டால், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கும் தற்போதைய எரிபொருள் விலை மற்றும் விநியோக நிலையைத் தொடர்ச்சியாகப் பேண முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

ஏனைய தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் குறைத்துள்ளமையால் சில பிரதேசங்களில் தற்காலிக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய நிலைமை ஏற்படக்கூடிய 62 பகுதிகள் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பே அடையாளம் காணப்பட்டு, அந்தப் பகுதிகளுக்கு கூடுதல் எரிபொருளை விநியோகிக்க குறித்த நிறுவனங்களுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

எனவே, நாட்டில் எரிபொருள் தொடர்பில் பாரிய நெருக்கடி எழுவதற்கு வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்ட அவர், வீண் வதந்திகளை நம்பிக் கலக்கமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனப் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். 

தனியார் நிறுவனங்களின் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு அல்லது நீண்ட வரிசைகள் காணப்பட்டால், அருகிலுள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லுமாறும், அங்கு போதியளவு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். 

இதேவேளை, கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்பில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை கையிருப்பு தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இன்றைய ஆய்வின் போது, மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்களை விரைவாக வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாதத்துக்குத் தேவையான அளவை விடக் கூடுதல் எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ShortNews

'ஐஸ் போதைப் பொருளுடன் கைதான SLPP உறுப்பினரை தடுப்புக் காவலில் விசாரிக்க அனுமதி!



மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் இன்று (6) கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 

மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
 

தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டுள்ளார் என்பதற்கான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

ShortNews

முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் சங்கத்தினால் கல்முனை வழக்கில் ஆஜராக முடியுமா : முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீலுர்ரஹ்மான் கேள்வி.




நூருல் ஹுதா உமர் 

நீதிமன்ற சட்டங்களின் படி நீங்கள் ஒரு இடையீட்டு மனுதாரர்களாக (பிரதிவாதிகளாக) இல்லாத நிலையில் நீதிமன்றில் தோன்றி இந்த வழக்கில் நீங்கள் எப்படி ஆஜராகி வாதாட முடியும் என்பதை  மக்களுக்கு பகிரங்கமாக விளக்குங்கள். அதற்கான தகுதி (Locus Standi ஒரு வழக்கில் சட்டரீதியாக ஆஜராகி, தன் தரப்பில் வாதிடுவதற்கான சட்டத் தகுதி / உரிமை.) உங்களுக்கு இல்லை. 

நீங்கள் நேரடியாக இந்த வழக்கில் வாதாட முடியாது என்பதே சட்டத்தரணிகளின் கருத்தாகும். வேண்டுமென்றால் பார்வையாளர்களாக வந்து இந்த வழக்கை பார்வையிட முடியும் என முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் விரிவுரையாளரும், இவ்வழக்கின் இடையீட்டு மனுதாரருமான எம்.ஏ. கலீலுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலக விடயமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எதிர்வரும் 07ம் திகதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் சங்கம் பங்களிப்புக்களை செய்ய உள்ளதாக ஊடகங்களில் வெளியான கருத்தையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கல்முனை உப பிரதேச விடயமாக தாக்கல் செய்துள்ள வழக்கின் இடையீட்டு மனுதாரராக (பிரதிவாதி) உள்ள நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் சங்கத்தை நோக்கி சில கேள்விகளை தொடுக்கவேண்டி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த சங்கத்தின் பிரதானிகளாக இருக்கும் சட்டமுதுமணி ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர்களிடம் சில கேள்விகளை தொடுக்கவேண்டி இருக்கிறது. 

வழக்கின் இடையீட்டு மனுதாரராக (பிரதிவாதி) உள்ள நானும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்த்தன குழுவும், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அவர்களின் குழுவும் ஆஜராகி வருகிறது. இவர்களின் மூலமாக முஸ்லிம் சமூகம் பாதிப்படையா வண்ணம் இடைக்கால தீர்ப்பொன்றையும் பெற்றோம். அதில் இந்த உப செயலகத்தை தரமுயர்த்த முடியாதென்பதை அந்த தீர்ப்பு பிரதிபலித்தது. இறுதி தீர்ப்பை இந்த வழக்கு நெருங்கியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகள் தமது வாதங்கள், சமர்பணங்களை முடித்துள்ளனர்.  

எதிர்வரும் 07ம் திகதி மற்றும் நவம்பர் 02ம் திகதி இது தொடர்பிலான சமர்ப்பணங்கள் மற்றும் வாதங்களை முன்வைக்கவுள்ள நிலையில் இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் சங்கம் இந்த வழக்குக்கு பங்களிப்பு செய்யவுள்ளதாக அறிவிக்கிறார்கள். 

பார்வையாளர்களாக நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்கின் போக்கை அவதானித்து விட்டு நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்து குழுப்புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு படம் காட்டுவதுடன் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் என்ற அடிப்படையில் ஊடகங்களுக்கு கருத்து கூறுவதுடன் கல்முனை உப பிரதேச செயலக வழக்கில் நாங்கள் கடுமையாக கஷ்டப்பட்டு போராடுகிறோம், பங்களிப்பு செய்து வருகிறோம். இனியும் பங்களிப்பு செய்யப்போகிறோம் என அதை வைத்து அரசியல் விளம்பரமொன்றை மக்களுக்கு அரங்கேற்ற போகிறீர்கள். 

இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் அன்றிருந்த எங்களின் கல்முனை முஹையதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் சம்மாந்துறைக்கு ஓடோடி வந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவரையும், அக்கட்சி முக்கியஸ்தர்களையும் அங்கு சந்தித்து இந்த பிரச்சினைகளை விலாவாரியாக சொல்லி உங்கள் கட்சி செயலாளராக இருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரை இந்த வழக்கில் ஆஜராகி வாதாட பணிக்குமாறு அல்லது இந்த வழக்கின் நீதிமன்ற செலவுக்கு உதவுமாறு மன்றாடி கேட்டோம். 

அன்று சுமந்திரன், சாணக்கியன், தமிழரசு கட்சி எம்.பிக்களின் நல்லுறவு, தமிழர்களை பகைத்துக்கொள்ள கூடாது என்ற எண்ணம் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக முஸ்லிங்கள் நிற்க கூடாது என்பதற்காக ஒதுங்கி இருந்து விட்டு வழக்காட ஜனாதிபதி சட்டத்தரணி அல்ல சாதாரண கனிஷ்ட சட்டத்தரணியை கூட உதவ அனுப்பவுமில்லை, ஒரு சதமெனும் நிதி உதவியும் செய்யவில்லை. 

இந்த வழக்கில் உங்களுக்கு கரிசனை இல்லை என்பதற்கு ஆதாரமாக கௌரவ நீதிபதிகளான மாயாதுன்ன, கோபல்லாவ முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இந்த நீதிபதிகள் மாற்றப்பட்டு கௌரவ நீதிபதிகளான மாயாதுன்ன, லக்மாளி கருணாநாயக்க ஆகியோர்களே இந்த வழக்கை விசாரிக்க உள்ளனர். இதிலிருந்தே இந்த வழக்கு விடயத்தில் நீங்கள் நுனிப்புல் மேய்கிறீர்கள் என்பது புலனாகிறது. என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ShortNews

தும்பனே பிரதேச சபை உறுப்பினர் ருவன் பிரதீப பதவி நீக்கம். - மஸீஹுதீன் நயீமுல்லாஹ் அறிவிப்பு.





ஐக்கிய தேசியக் கூட்டமைப்பை (UNA) பிரதிநிதித்துவப்படுத்தி தும்பனே பிரதேச சபை உறுப்பினராகச் செயற்பட்ட வன்சேகர முதியான்சேலாகே ருவன் பிரதீப, கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான 2508/49 இலக்க வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் UNA சார்பில் போட்டியிட்ட ருவன் பிரதீப, கட்சிக்கு கிடைத்த வெகுமதி ஆசனத்தின் மூலம் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கட்சித் தீர்மானத்தின்படி, வெகுமதி ஆசனங்கள் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களுக்கு தலா ஒரு வருட காலத்திற்கு சுழற்சி முறையில் வழங்கப்படவிருந்தன.

அதன்படி, ஒரு வருட காலத்திற்குப் பின்னர் தமது பதவியை இராஜினாமா செய்து அடுத்த வேட்பாளருக்கு வாய்ப்பளிப்பதாக ருவன் பிரதீப எழுத்துமூலம் உறுதியளித்திருந்ததாக கட்சி தெரிவித்துள்ளது. எனினும், காலம் நிறைவடைந்த பின்னரும் அவர் பதவி விலகாததால், கட்சியின் ஒழுக்காற்று விதிகள் மற்றும் கட்சித் தீர்மானங்களை மீறியதாகக் கூறி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அவரை கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்குவதற்கு கட்சி தீர்மானித்ததுடன், குறித்த தீர்மானம் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது பிரதேச சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாக்கப்பட்டு, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மஸீஹுதீன் நயீமுல்லாஹ், ருவன் பிரதீப பிரதேச சபை உறுப்பினராகச் செயற்பட்ட காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர் எனக் குறிப்பிட்டார். எனினும், அவரது தனிப்பட்ட செயற்பாடுகள் தொடர்பான வேறு எந்தக் காரணத்திற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், கட்சியின் ஒழுக்காற்று விதிகளை மீறியமை மற்றும் கட்சிக்கும் சக வேட்பாளர்களுக்கும் வழங்கிய உறுதிமொழிக்கு மாறாகச் செயற்பட்டமையே நடவடிக்கைக்கான காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “தகுதியான ஒரு உறுப்பினரை பதவியிலிருந்து நீக்குவதை கட்சி ஒருபோதும் விரும்புவதில்லை. எனினும், அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்த தகைமை வாய்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கும், அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் வழங்கிய உறுதிமொழிகளை மீறி கட்சி ஒருபோதும் செயற்பட முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.