அடிப்படைவாதிகளின் தாக்குதல்களின் பின்னர்
நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது
என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அமெரிக்க புலனாய்வுப் பிரிவு பயங்கரவாதத்
தாக்குதல்கள்களுடன் தொடர்புபட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை சந்தித்ததன் நோக்கம் என்ன
என்றும் கேள்வி எழுப்பினார்.
அடிப்படைவாதத்துக்கு எதிரான மக்கள்
இயக்கத்தின் மாநாடு குருணாகலில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
தெரிவித்ததாவது : நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற போது ஜனாதிபதி
நாட்டில் இருக்கவில்லை. பிரதமர் கொழும்பில் இருக்கவில்லை. தாக்குதல்கள் தொடர்பில்
தகவல்கள் கிடைத்திருந்தும் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லை.
இம்மாதம் 21 ஆம் திகதியுடன் குண்டுத்தாக்குதல்கள்
இடம்பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்த போதும் இது வரையில்
தீர்வொன்று வழங்கப்படவில்லை.
இம்மாதம் 24 ஆம்
திகதி காலை 9.30 மணியளவில் வெலிசறை கடற்படை தளத்தில்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்;டுள்ள
சந்தேக நபர்களை அமெரிக்க பிரதிநிதிகள் சிலர் சந்தித்துள்ளனர். அமெரிக்க
புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த இருவரும், இலங்கைக்கான
அமெரிக்க தூதுரக அதிகாரியொருவரும், தூதுரகத்தில்
பணிபுரியும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
வேறு யாருக்கும் இதில் அனுமதி வழங்கப்படவில்லை என்று அறியக்கிடைத்துள்ளது.
கடற்படையினர் இந்த சந்திப்புக்கு அனுமதி
வழங்க மறுத்த போதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால்
அவர்கள் கூட அந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. சுமார் 2 மணித்தியாலயம் இந்த சந்திப்பு நீடிதிருந்தபோதிலும் இது
வரையில் அது தொடர்பான தகவல்கள் யாருக்கும் தெரியாது.
இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது அனைத்து
விடயங்களிலும் அமெரிக்காவுக்கு ஏற்றாற் போல இலங்கை முழுமையாக மாறியிருப்பது
தெளிவாகிறது. அண்மையில் அமெரிக்காவிலிருந்து பெயர் கூட குறிப்பிடப்படாத
விமானமொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இது தொடர்பிலும் யாரும் கவனம்
செலுத்தவில்லை.
இவ்வாறு பொறுப்பற்று செயற்படுவதன் மூலம்
பயங்கரவாதம் மிக இலகுவாக இலங்கையில் ஊடுருவதற்கு அரசாங்கம் தான் வழியமைத்துக் கொடுத்துள்ளது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு சவுதி அரேபியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற நிதி
தொடர்பில் மத்திய வங்கிக்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமைக்கும் இந்த
அரசாங்கத்தின் முறையற்ற கொள்கைகளே காரணமாகும்.
தௌஹித் ஜமாஅத் அமைப்பின் கொழும்பு மாவட்ட
அமைப்பாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு பொலிஸ் உள்ளிட்ட யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பயங்கரவாதத்
தாக்குதல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட முஸ்லிம்
இளைஞர்களுக்குப் பிணை வழங்கப்பட்டால் அதற்கு யாரும் எதிர்ப்புக் தெரிவிக்கக்
கூடாது என்று அரசாங்கம் கட்டளையிட்டுள்ளது. ஆனால், எந்தத்
தவறும் இழைக்காது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இராணுவ வீரர்களுக்கு பிணை
வழங்கப்பட்டால் மாத்திரம் நாலாபக்கமும் இருந்து எதிர்ப்புக்கள் வெளியிடப்படும்.
வேலுப்பிள்ளை பிரபாகரனால் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட
பிரிவினைவாதம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு , தற்போது
முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பிரிவினை வாதத்துக்கு எதிராக செயற்பட வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம், தேர்தல்கள்
ஆணைக்குழு உள்ளிட்ட பல முக்கிய அரசதுறைகளில் அமெரிக்காவிடமிருந்து ஊதியம் பெற்றுக்
கொண்டு பலர் பணிபுரிக்கின்றனர். அதே போன்று அரச ஊடகங்களில் அமெரிக்க பிரஜைகள் பணி
புரிகின்றனர். இது நாட்டின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குரியாக்குகின்றது.
இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும்.
அதற்கு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த பொறுப்பு எம்மிடம் உள்ளது.
எமக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னின்று செயற்பட
வேண்டும் என்றார்.
