நோர்வேயில் பள்ளிவாசல் ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், வீடொன்றில் தனது ஒன்றுவிட்ட சகோதரியை சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட இளைஞனை 4 வாரங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நோர்வே நீதிமன்றமொன்று நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்தார். பள்ளிவாசலில் இருந்த 65 வயதான ஒருவரால் துப்பாக்கிதாரி மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இத்துப்பாக்கிதாரி 21 வயதான பிலிப் மன்ஷோஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த இளைஞனை ஒஸ்லோ நீதிமன்றமொன்றில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். முகம், கழுத்து, கைக ளில் சிராய்ப்புக் காயங்களுடன் அந்த இளைஞன் காணப்பட்டான். பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்கு முன், வீடொன்றில் தனது சகோதர முறையான 17 வயது யுவதியையும் பிலிப் மன்ஷோஸ் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. பள்ளிவாசல் துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் அந்த யுவதியின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
துப்பாக்கிதாரியை மடக்கிப் பிடித்த 65 வயதான பாகிஸ்தானியர்
இதேவேளை, துப்பாக்கிதாரியான மேற்படி இளைஞனை பள்ளிவாசலில் மடக்கிப் பிடித்தவர் பாகிஸ்தானிய மொஹம்மத் ரபீக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் விமானப் படைவீரர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
