அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்காலத்தில்
மீண்டும் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விரும்பினால் அதற்கு தாம் தயார் என
தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இருதரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான தூதுவர், ஷெர்
மொஹமட் அப்பாஸ் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய
செவ்வியில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஆப்கானிஸ்தானில் அமைதிக்கான ஒரே வழி பேச்சுவார்த்தையே” என
அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி, பேச்சுவார்த்தைகளை
கைவிடுவதாக, அறிவித்து ஒரு வாரத்திற்கு பின்னர், இந்த
தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாத ஆரம்பத்தில், இரு
தரப்பினரும் 18 ஆண்டுகால மோதலை முடிவுக்கு
கொண்டுவருவதற்கான இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு, கொள்கை
அளவில் உடன்பட்டனர்.
அமெரிக்க ஜனாதிபதி, தலிபான்
அமைப்பின் சிரேஷ்ட தலைவர்களையும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானியையும், பேச்சுவார்த்தைக்காக
அழைத்திருந்தார்.
எனினும், தலிபான்
அமைப்பின் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக, ட்ரம்ப்
அறிவித்திருந்த நிலையில், ஆப்கானில் தாக்குதல் சம்பம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
தலைநகர் காபூலில் இடம்பெற்ற இந்த தாக்குதலில், அமெரிக்க
இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதோடு தாக்குதலுக்கு தலிபான்கள் அதற்கு
பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்த விடயத்தில் கடுத்து ஆத்திரம் அடைந்த அமெரிக்க ஜனாதிபதி, இந்த
சந்திப்பை இரத்து செய்வதாக அறிவித்ததோடு, சமாதானப்
பேச்சுவார்த்தையில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் சுமார் 14,000 அமெரிக்கப்
படையினர் காணப்படுவதுடன், தலிபான்களுடன் கொள்கை அளவில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா
அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானில் இருந்து
தனது 5,400 துருப்புக்களை மீளப்பெறுமென
அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
