Our Feeds


Sunday, September 15, 2019

www.shortnews.lk

சஜித் குழுவுக்கும் TNA வுக்கும் இடையிலான இன்றைய (15) பேச்சுவார்தை தோல்வி

 


ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வினை வழங்கப்போகின்றார் என்பதே எமக்கு முக்கியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுகொள்ளும், எமது நிபந்தனைகளை அங்கீகரித்து  அதற்கு உத்தரவாதம் வழங்கும் நபராக இருந்தால் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தும் நபருடன் நாம் பேசி அவரை ஆதரிப்பது குறித்து தீர்மானம் எடுப்போமெனவும்  சஜித் தரப்பு பிரதிநிதிகளுடனான பேச்சுவர்த்தையில் இரா.சம்பந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை களமிறக்கும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சியின்  அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு அணியினர் தமக்கான ஆதரவை திரட்டும் வகையில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிங்கள கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்று அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து தமக்கான ஆதரவை கோரியுள்ளனர். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
இன்று காலை 11 மணிக்கு ஆர்.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 
இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இடையில் நாளைமறுதினம் காலை கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டு தமது நிலைப்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பிற்பகல் 3 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். 
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »