பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பஸ் வண்டிகளில் பாடல்கள், வீடியோ காட்சிகளை ஒளிபரப்பு செய்வது தொடர்பிலான முறைப்பாடுகளை 1955 என்ற துரித இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இவ்வகையான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் மெதுவாக பயணிப்பது, அதுபோல் பஸ் வண்டியின் சாரதிகளும், நடத்துனர்களும் சட்டவிரோதமாகவும், பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டால் குறித்த இலக்கத்தின் ஊடாக முறையிட முடியும்.
இதனிடையே ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பஸ் வண்டிகளில் ஒலிபரப்பு செய்வதற்கு பொருத்தமான ஆயிரம் பாடல்களை வழங்குவதற்கு பயணிகள் போக்குவரத்து முகாமைத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விசேட குழுவொன்றின் ஆய்வுகளுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட இந்தப் பாடல்கள் மாக்கும்புற மத்திய நிலையத்தில் நாளை முதல் பெற்றுக் கொள்ள முடியும்.
பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்ததாத வகையில் பாடல்களை ஒலிக்க விடுவது தொடர்பில் பஸ் வண்டிகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
