கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டம் குறித்து பாரிய சர்ச்சை எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் சிறிகொத்த தலைமையகத்தில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை அடையாளம் கண்டுக்கொள்ளும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை நாளொன்றிற்கு 5000 வரை அதிகரிக்குமாறு தான் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிய போதிலும், அரசாங்கம் நாளொன்றிற்கு 690 வரையான பீ.சி.ஆர் பரிசோதனைகளையே நடத்தி வருவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகிலுள்ள பல அபிவிருத்தி அடைந்த அரசியல் கலாசாரங்களை கொண்ட நாடுகள் கூட, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் அந்தந்த நாடுகளின் எதிர்கட்சிகள் ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதுடன், அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியும் கொரோனா தொற்றை இல்லாதொழிக்கும் திட்டத்திற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க தயார் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தான் அலரிமாளிகையில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி அரசாங்கத்திற்கு வழங்கிய தெளிவூட்டல்களையும் இதன்போது நினைவூட்டியுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தல் இலங்கையில் 102 கொரோனா தொற்றுக்குள்ளானோரே
பதிவாகியிருந்ததாகவும், இலங்கை கொரோனாவினால் எந்தவொருவரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், தற்போது நாட்டில் 1814 கும் அதிகமான கொரோனா தொற்றுக்குள்ளானோர் பதிவாகியுள்ளதாக கூறிய அவர், அரசாங்கம் எதிர்கட்சிகளின் கருத்துக்களை மாத்திரமன்றி, சுகாதார துறையிலுள்ள பிரபல்யங்களின் கருத்துக்களை கூட செவிமடுக்காதுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
அதனாலேயே இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இந்த நாட்டு மக்கள் தொகையை விட மூன்று மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்ட சீனாவிற்கு அண்மை நாடான வியட்நாமில் இதுவரை 350 கொரோனா நோயாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அங்கு இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியட்நாமில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதே அதற்கான ஓரே காரணம் என ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
இலங்கை அரசாங்கம் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமையே, நாட்டை முடக்கி வைக்க வேண்டிய நிலைக்கான காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வர முடியாமைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அவர் கூறுகின்றார். இந்த நிலைமை காரணமாக பெரும்பாலானோருக்கு தமது வருமான வழிகள் இல்லாது போயுள்ளதாகவும், அரசாங்கம் இந்த விடயங்களை கருத்தில் கொள்ளாது இதனூடாக அரசியல் இலாபங்களை பெற்றுகொள்ள முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா ஒழிப்புக்காக உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய 230 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதற்காக பயன்படுத்தியது என அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டிருக்குமானால், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றிற்குள் கொரோனா வைரஸ் தொற்றியிருக்காது என ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கூட அரசாங்கத்தினால் முடியவில்லை என ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.
