இந்தியாவின் டெல்லி மத வன்முறையில் பிப்ரவரி 25 மாலை முதல் பிப்ரவரி 26 பின்னிரவு வரை கொல்லப்பட்ட ஒன்பது முஸ்லிம் இளைஞர்களும், அவர்கள் கொலை செய்யப்படும் முன்பு ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட வற்புறுத்தப்பட்டனர் என்று டெல்லி காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொல்லப்படும் முன்பு அவர்கள் ஆடைகள் களையப்பட்டு, தாக்கப்பட்டனர் என்கிறது அந்த செய்தி.
அவர்கள் அனைவரின் உடல்களும் பாகீரதி விகார் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டன.
இந்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்களைக் கொலை செய்ததாக கைதாகியுள்ள நபர்கள் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர் இவர்கள் அனைவரும் 'கத்தார் இந்து ஏக்தா' வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருந்தவர்கள்.
இந்தக் குழு இஸ்லாமியர்களை பழிவாங்குவதற்காக பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கப்பட்டது என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் டெல்லியில், குடியுரிமைத் திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் போது உண்டான வன்முறையில் 51 பேர் கொல்லப்பட்டனர்.