
தேனீக்களில் காணப்படும் விஷமானது மோசமான மார்பு புற்றுநோய்க் கலங்களை அழிப்பது ஆய்வுக்கூட பரிசோதனையொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
தேனீக்களில் காணப்படும் மெலிட்டின் எனப்படும் விஷமே இவ்வாறு புற்றுநோயைக் கலங்களை அழிப்பது தம் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஹரி பெர்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தை சார்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி ஆய்வுக்காக 300 க்கு மேற்பட்ட தேனீக்கள் மற்றும் வண்டுகளிலிருந்து விஷம் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இப்பரிசோதனையின் போது மார்பு புற்றுநோய்க்கலங்கள் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைந்த நேரத்தில் அழிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இக்கண்டுபிடிப்பு பரவசம் தரும் ஒன்றாக உள்ளது என கூறும் விஞ்ஞானிகள், எனினும் அது தொடர்பாக மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்வது தேவையாகவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.