Our Feeds


Tuesday, October 6, 2020

www.shortnews.lk

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 321 ஆக உயர்வு

 



மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 220 பேர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

நேற்றிரவு 101 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது மேலும் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அதற்கமைய ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவரை 321 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் (05) அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் இன்று (06) காலை கிடைத்துள்ள நிலையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (05) கிடைத்த PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, பல்வேறு பகுதிகளிலும் உள்ள குறித்த நிறுவனத்தின் பணியாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்று  பிற்பகல் அடையாளம் கணப்பட்ட தொற்றாளர்களில் அதிகளவானோர் மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இதனைத் தவிர திவுலபிட்டி, மீரிகம, ஜா-எல, மஹர, சீதுவை, கட்டான பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்திலிருந்து விடுமுறையில் சென்ற குருணாகல் - கட்டுபொத்த, மொணராகலை - மெதகம, யாழ்ப்பாணம் - வேலணை பிரதேசங்களிலிருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் IDH வைத்தியசாலை உட்பட நாட்டிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இந்நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,733 ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »