(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க, நேற்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் அவரது குழுவினர், ஆணைக்குழுவுக்கு பல பரிசுப் பொதிகளை எடுத்து வந்ததை அவதானிக்க முடிந்தது.
சுமார் 20 பொதிகள் இவ்வாறு எடுத்து வரப்பட்டதுடன் அதில் 12 பொதிகள் ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இடம்பெறும் மண்டபத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டன, ஏனையவை, ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதை அவதானிக்க முடிந்தது.
அந்த பொதிகளில் பலவற்றை ஆணைக் குழுவின் சேவையாளர்கள் சிலரும் இணைந்து ஆணைக்குழுவுக்குள் பொதிகளை எடுத்து சென்றதை அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும் அந்த பொதிகளில் ‘வட்டிலப்பம்” இருந்ததாக பின்னர் அறிய முடிந்தது.
எவ்வாறாயினும் பின்னர், அந்த பொதிகள் திருப்பி அனுப்பட்டதாக ஆணைக் குழுவின் ஊழியர் ஒருவர் தெரிவித்தபோதும், அவை திருப்பி எடுத்துச் செல்வதை நாம் காணவில்லை.
ஏற்கனவே பொது பலசேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரின் சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்ய அப்போது உலமா சபையின் பொதுச் செயலர் தொலைபேசியை எடுத்துச் சென்றமை பெறும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான பின்னணியிலேயே நேற்று வட்டிலப்பாம் பொதிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இன்று (10) மாலைவரை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, எந்த உத்தியோகபூர்வ அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
