Our Feeds


Wednesday, December 16, 2020

www.shortnews.lk

தற்கொலைதாரி இன்சாப் அஹமட்டை தான் சந்திப்பை நடத்தியதாக கூறப்படும் விடயம் முற்றிலும் பொய்யானது.- ரியாஜ் பதியுதீன் சாட்சியம்

 

 

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான  இன்ஷாப் அஹமட் என்பவருடன், சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதலை அண்மித்த தினம் ஒன்றில்  தான் சந்திப்பை நடத்தியதாக கூறப்படும் விடயம் முற்றிலும் பொய்யானது என, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

இது தொடர்பில் சிஐடியினர் விசாரித்து,  அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டதாகவும், அதன் பின்னரே தான் தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அவர் நேற்று முன்தினம்  சாட்சியமளித்தார்.

 சிரேஷ்ட அரச சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் நெறிப்படுத்தலில் சாட்சியம் வழங்கிய பின்னர், மேலதிக சாட்சியமாக தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் கேள்விகளுக்கு பதிலளித்து இந்த விடயங்களை ரியாஜ் பதியுதீன் முன்வைத்தார்.

 இதன்போது சிரேஷ்ட அரச சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தும் ரியாஜ் பதியுதீன் சாட்சியம் வழங்கினார். அவரது சாட்சியம் தமிழ் மொழியில் வழங்கப்பட்டதுடன், அவருக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.

 பேராதனை பல்கலைக்கழகத்தின்  கலைத்துறை பட்டதாரியான தான், 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை, தனது சகோதரரான ரிஷாத் பதியுதீன் அமைச்சராக பதவி வகித்த காலத்தின்போது அவரது பிரத்தியேக மற்றும் வெகுசன தொடர்பாடல் செயலராக பணியாற்றியதாக அவர் சாட்சியமளித்தார்.

‘ உண்மையில் நான் ஒரு வர்த்தகர்.  மெகா கன்ஸ்டர்க்ஷன் என்பதே எனது வர்த்தக நடவடிக்கையின் நிறுவனப் பெயர்.  2015 ஆம் ஆண்டு முதல் நான் எந்த  அரச பதவிகளிலோ அல்லது எனது சகோதரரின் அமைச்சு சம்பந்தப்பட்ட பதவிகளிலோ இருக்கவில்லை.

ஓஎச்ஆர்டி எனும்  அரச சார்பற்ற நிறுவனத்தையும் நானே ஆரம்பித்தேன்.  அதன் முதலாவது தலைவரும் நானே.  தற்போது அந்த அரச சார்பற்ற நிறுவந்தின் தலைவராக எனது  சகோதரரின் மனைவியின் தந்தையான சிஹாப்தீன் செயற்படுகின்றார்.

குறித்த அரச சார்பற்ற நிறுவனத்துக்கு நான் தலைமை வகித்தபோது,  கத்தார் யூ.எச். எய்ட் நிறுவங்கள் ஊடாக நிதி உதவிகள் கிடைத்தன.  அந்த நிதியானது அரச வங்கிகள் ஊடாகவே கிடைத்தன. மத்திய வங்கிக்கு அந்த நிதி செலவு செய்யப்படும் முறைமை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கியதாக விண்ணப்பம் ஒன்றைப் பூர்த்தி செய்து கொடுத்த பின்னரேயே அந்த நிதி எமது கணக்குகளுக்கு வைப்புச் செய்யப்பட்டன. ‘ என இதன்போது ஆரம்ப கேள்விகளுக்கு பதிலளித்தவாறு ரியாஜ் பதியுதீன் சாட்சியமளித்தார்.

இதனையடுத்து சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல்  நடத்திய இன்ஷாப் அஹமட் எனும் தற்கொலை குண்டுதாரியை மையப்படுத்தி கேள்விகள் எழுப்பட்டன. அவற்றுக்கு  பதிலளித்த ரியாஜ் பதியுதீன்,

‘இன்சாப் அஹமட்டே சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்தியதாக தொலைக்காட்சியைப் பார்த்தே அறிந்து கொண்டேன்.  அவர் அலாவுதீன் பொஸ்ஸின் மகளை திருமணம் செய்திருந்தார். அந்த திருமண வைபவத்துக்கு நானும் சென்றிருந்தேன்.  அந்த  திருமணத்துக்கு சென்றதனாலேயே  இன்ஷாப்பை எனக்கு தெரியும்.

 அலாவுதீன் பொஸ் எமக்கு  உறவு முறையானவர். நான் இரு தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தினேன்.  அதில் ஒரு இலக்கத்துக்கு இன்ஷாப் எனக்கு அழைப்பெடுத்திருந்தார். இன்சாப்பை நான் ஒரு பலசரக்கு வர்த்தகராக மட்டுமே அறிந்திருந்தேன்.

பின்னரான காலப்பகுதியிலேயே அவருக்கு செப்பு தொழிற்சாலை இருந்தை அறிந்து கொண்டேன். எனினும் அவரது தொழிற்சாலைக்கு ஒருபோதும் நான் சென்றதில்லை. கடந்த 2019 பெப்ரவரி மாதமளவில் இன்சாப் எனக்கு அழைத்தபோதே அவர் செப்பு வர்த்தகம் செய்வதை அறிந்தேன். அவர் எனக்கு அழைத்து, அவரது ஏற்றுமதி தடை  செய்யப்பட்டுள்ளதால் அது தொடர்பில் பேச அமைச்சரிடம் நேரம் ஒதுக்கித் தரக் கோரினார்.  இது தொடர்பில் நான் அமைச்சரான எனது சகோதரரிடம் கூறிய போது, அவர்  அதற்கான நேரத்தை தரவில்லை.

அவரது ஏற்றுமதி தடைபட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகம் ஊடாக தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் பேசவே அவர் நேரம் கேட்டார்.’  என குறிப்பிட்டார்.

 இதன்போது ஆணைக்குழுவின் தலைவர் நீதியர்சர் ஜனக் டி சில்வா, உங்கள்  சகோதரன் தொலைபேசி இலக்கமும்  இன்ஷாப்பிடம் இருந்துள்ளது.  அப்படியாயின் அவர் உங்கள் சகோதரருக்கு நேரடியாக அழைக்காமல் ஏன் உங்கள் ஊடாக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முயற்சித்தார் என கேள்வி எழுப்பினார்.

 அதற்குப் பதிலளித்த ரியாஜ் பதியுதீன், எனக்கு தெரியாது. அதனை அவரிடமே கேட்க வேண்டும். என்றார்.

தொடர்ந்தும் சாட்சியமளித்த ரியாஜ் பதியுதீன், அரச சிரேஷ்ட சட்டவாதியின்  கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

‘ 2019 ஆம் ஆண்டு இன்ஷாப்பிடமிருந்து 7 அழைப்புக்கள் எனக்கு வந்துள்ளன. அவை அனைத்தையும் அவரே எனக்கு எடுத்துள்ளார்.  2019 மார்ச் முதலாம் திகதி அவர் எனக்கு மூன்று நான்கு அழைப்புக்களை எடுத்துள்ளார். என்னை சிஐடி கைது செய்த போதே அதனை நான் அறிந்தேன்.

 அன்றைய தினம் எனது சகோதரரின்  அமைச்சுக்கு தூர இடங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். அன்றைய தினம் அமைச்சர் அங்கு வரமாட்டார் என அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு கூறுவதற்கு நான் சென்றேன். அதன்போதே  இன்ஷாப் அந்த அழைப்புக்களை எடுத்த வண்ணம் அங்கு வந்தார்.

நான் எனது வாகனத்தில் அங்கிருந்து செல்ல முற்பட்டபோது, அவர் அங்கு  வந்து, ‘ நான் ஜனாதிபதி செயலகத்தின் நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஏற்றுமதிகளை தடை  செய்துள்ளனர். அது தொடர்பில் பேசவே உங்கள் அமைச்சரிடம் நேரம் கேட்டேன். அவர்  அதனைத் தரவில்லை. எனவே, நான் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க தீர்மானித்துள்ளே. என்னை தவறாக நினைக்க வேண்டாம்.’ என அவர் கூறிச் சென்றார்.

இதன்போது ஆணைக்குழுவின் உறுப்பினரான மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன,  1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து முகாமில் தங்கியிருந்த நீங்கள் எப்படி இவ்வளவு  சொத்துக்களை சம்பாதித்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

 அதற்கு பதிலளித்த ரியாஜ் பதியுதீன், இது ஓரிரு நாட்களில் சம்பாதிக்கப்பட்டவை அல்ல. 20 வருடங்களாக கஷ்டப்பட்டு படிப்படியாக சம்பாதிக்கப்பட்டவை என தெரிவித்தார்.

 பின்னர்  அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கான  விளக்கம் கோரும் கடிதம் (லெட்டெர் டிமான்ட்) ஒன்றினையும் அவர் அனுப்பியிருந்தார். ‘ என சாட்சியமளித்தார்.

 இந்நிலையில் அரச சட்டவாதியின் கேள்விகளுக்கு பின்னர், மேலதிக சாட்சியமாக தனது சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்பின் கேள்விகளுக்கு பதிலளித்து ரியாஜ் பதியுதீன் சாட்சியமளித்தார்.

 அதன்போது  சிஐடியால் தான் கைது செய்யப்பட்டமை, விடுவிக்கப்பட்டமை தொடர்பிலும் அவர் விரிவாக சாட்சியமளித்தார்.

‘சிஐடியினர் என்னைக் கைது செய்தபோது மேலும் 6 பேரையும் கைது செய்திருந்தனர். அதில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் அடங்குவார்.  எனக்கு முன்னரேயே இரண்டு மூன்று மாதங்களில்  3 பேர் விடுவிக்கப்பட்டனர். எனக்கு குண்டுதாரியான இன்சாப் எடுத்திருந்த 7 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலேயே விசாரணை செய்யப்பட்டேன். அவை அனைத்தும் இன்ஷாபால் எடுக்கப்பட்டவை.

 தாக்குதலை அண்மித்த தினத்தில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் நானும் இன்சாப்பும் சந்தித்ததாக கூறப்பட்டது. அது பொய். உண்மையில் 2019 மார்ச் முதலாம் திகதி  நான் அமைச்சுக்கு சென்றபோது அங்கு வந்து இன்ஷாப் என்னிடம் பேசியமையே அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 ஏனெனில்,  எனது சகோதரரின் அமைச்சும்,  சினமன் கிராண்ட் ஹோட்டலையும் பிரிப்பது ஒரே ஒரு மதில் மட்டுமே. அவ்வாறான நிலையில், அமைச்சிலிருந்தோ, சினமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்தோ அழைப்பு எடுக்கப்பட்டால் அது ஹொலிடே இன்  எனும் தொலைபேசி கோபுரத்தையே காட்டும். அந்த தரவை வைத்து சிஐடியினர் ஸ்தலத்துக்கு என்னை அழைத்து சென்று  தொலைபேசி அழைப்புக்களையும் எடுத்து ஒப்பீடு செய்து விசாரித்தனர். அனைத்து விசாரணைகளின் பின்னரே நான்  விடுவிக்கப்பட்டேன்.’ என ரியாஜ் பதியுதீன் சாட்சியமளித்தார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »