Our Feeds


Monday, December 14, 2020

www.shortnews.lk

ரிஷாட் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக முன்னாள் SSP இன் வாக்குமூலம் அப்பட்டமான பொய்! - ரிஷாத் பதியுதீனின் சட்டத்தரணி

 



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் சாட்சியத்தின்போது, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்திருக்கும் வாக்குமூலமானது போலியானது எனவும் அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் முற்றாக மறுத்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான ருஷ்தி ஹபீப் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.


ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மஹிந்த திஸாநாயக்கவுக்கு தனது சேவையாளரான பதியுதீன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவில்லை எனவும் அவருடன் எந்தவொரு உரையாடல்களையும் நடத்தவில்லை என்பதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என மறுத்துள்ளார்.

குருணாகல் அரச பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டையும் முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.

குறித்த சாட்சியாளரான திஸாநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களை பரிசீலனை செய்து, இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதன் மூலம் திஸாநாயக்கவின் போலியான வாக்குமூலம் அம்பலமாகும் என ரிஷாத் பதியுதீன் பெரிதும் நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

எனது சேவையாளர் ரிஷாத் பதியுதீன் தொடர்பில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தெரிவிக்கப்படும் ஏதாவதொரு விடயத்தையும் சாட்சியங்களின்போது அவர் குறித்த பொய்யான விடயங்களையும் சில ஊடகங்கள் பூதாகரப்படுத்தி விளம்பரம் செய்கின்றன.

ஆனால் தனது சேவையாளர், தன்மீது சுமத்தப்படும் போலியான விவகாரங்கள் தொடர்பில், அவ்வப்போது மறுப்புக்களை வெளியிட்டாலும் கூட ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சிலவேளைகளில் அதனை விளம்பரப்படுத்துவதும் இல்லை என்றும் சட்டத்தரணி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »